/indian-express-tamil/media/media_files/2025/10/07/patna-pirates-vs-tamil-thalaivas-pkl-season-12-match-69-updates-in-tamil-2025-10-07-20-44-08.jpg)
பாட்னா பைரேட்ஸ் vs தமிழ் தலைவாஸ் பி.கே.எல் சீசன் 12, போட்டி 69.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் புரோ கபடி லீக் தொடரின் 69-வது லீக் ஆட்டம் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர்.
மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே சிறப்பாக தொடங்கின. ஆனால், முதல் 10 நிமிடத்தில் 13 -11 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் முன்னிலை பெற்றது. இருப்பினும், கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலின் அதிரடியான ரைடு தமிழ் தலைவாஸுக்கு கை கொடுத்தது. அதேநேரத்தில், அணியின் டிஃபென்ஸ் வலுவாக இருக்க அடுத்த 10 நிமிடத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 2 முறை ஆல்-அவுட் எடுத்தது. அந்த 10 நிமிடங்களில் 19-6 என புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ் முதல் பாதி முடிவில் 30 - 19 என அதிரடியாக முன்னிலை பெற்றது.
அதே அதிரடியான ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அடுத்த 10 நிமிடங்களுக்கு தொடர்ந்த நிலையில், 37-24 என 13 புள்ளிகள் வித்தியாசத்தில் அணி சிறப்பாக முன்னேறியது. மேலும் ஆட்டத்தில் மீதம் 7 நிமிடங்கள் இருக்க தமிழ் தலைவாஸ் அணி 3-வது ஆல்-அவுட்டை நிகழ்த்தியது.
ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், ஆட்டத்தில் 2 நிமிடம் மீதமிருக்க, அப்போது பாட்னா அணியின் அயன் 4 புள்ளிகளை அள்ளினார். ஆனால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அர்ஜுன் சிறப்பாக ரைடு செய்தார். அவர் ஆட்டத்தில் மொத்தமாக 26 புள்ளிகளை எடுத்தார்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 56 - 37 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபென்ஸ் வீரர்கள் நிதேஷ் குமார் மற்றும் ஆஷிஷ் தலா 5 புள்ளிகளை எடுத்து அசத்தினர். பாட்னாவின் அயன் 16 புள்ளிகளையும், அங்கித் குமார் 14 புள்ளிகளையும் எடுத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.