/indian-express-tamil/media/media_files/2025/10/23/pawan-sehrawat-on-arjun-deshwal-sanjeev-baliyan-tamil-thalaivas-management-criticism-pkl-12-tamil-news-2025-10-23-18-52-25.jpg)
இந்த சீசனில் கொண்டு வரப்பட்ட 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்குள் கூட நுழைய மிக மிகக் குறைந்த வாய்ப்பை கொண்ட தமிழ் தலைவாஸின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் மற்றும் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோர் அணி நிர்வாகம் மீது பரபர குற்றச்சாட்டை முவைத்தனர்.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. இத்தொடரில் களமாடிய சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அதன் அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி விட்டது. விளையாடிய 18 போட்டிகளில் 6-ல் வெற்றி, 12-ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இந்த சீசனில் கொண்டு வரப்பட்ட 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்குள் கூட நுழைய மிக மிகக் குறைந்த வாய்ப்பை கொண்ட தமிழ் தலைவாஸின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் மற்றும் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோர் அணி நிர்வாகம் மீது பரபர குற்றச்சாட்டை முவைத்தனர். அதாவது, கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் அல்லது பயிற்சியாளர்களாகிய தங்களால் அணியில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்றும், அதற்கென 'டீம் அனலிஸ்ட்' இருக்கிறார்கள், அவர்கள் தான் அணியைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் குற்றம் சட்டி இருந்தார் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன்.
மேலும் அவர், தான் தலைமை தாங்கும் அணியில், யார் யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரிவிப்பது இல்லை என்றும், பயிற்சியாளர்கள் வெறும் பெயர் அளவில் தான் இருக்கிறோம், தங்களுக்கு என எந்த அதிகாரமும் இல்லை என்றும் வேதனை தெரிவித்தார். இதேபோல், கேப்டன் அர்ஜுன் தேஷ்வால், தனக்கு முதுகெலும்பாகவும் உறுதுணையாகவும் முழு அணியும், அணி நிர்வாகமும் இருந்தால் மட்டுமே ஒரு அணியாக வெல்ல முடியும் என்றும், தனி ஆளாக தான் ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறியிருந்தார்.
தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளரும், கேப்டனும் அணி நிர்வாகம் மீது மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்திருப்பது பி.கே.எல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக தற்போது முன்னாள் கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த சீசனில் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்ட சூழலில், ஒழுங்கு காரணங்களுக்காக முதல் 3 போட்டிகளுக்குப் பிறகு அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து, அர்ஜுன் தேஷ்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அணியில் தான் விலக்கப்பட்டது குறித்து பேசிய பவன் ஷெராவத் "அணி நான் ஒழுங்கற்றவன் என்று சொல்லியிருக்கிறது. அவர்கள் சொல்வதில் ஒரு சதவீதம் உண்மை இருந்தாலும், நான் கபடி விளையாடுவதை நிறுத்திவிடுகிறான். நான் எந்த இடத்திலும் தவறு செய்திடவில்லை என்று தீர்க்கமாகச் சொல்கிறேன். அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல தான் இளைய சகோதரனாகக் கருதும் அர்ஜுன் தேஷ்வாலுடன் இணைந்து பல திட்டங்கள் தீட்டினோம். குறிப்பிட்ட ஒரு தனிநபரின் காரணமாக அதைச் செய்யமுடியவில்லை." என்று கூறினார்.
பவன் குறிப்பிட்ட அந்த ஒற்றை நபர் யார்? என்று அப்போதே பரவலாக விவாதிக்கப்பட்ட நிலையில், இப்போது பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான் டீம் அனலிஸ்ட் கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பற்றிக் கூறியதும், பவன் மறுபடியும் சமூக வலைதளத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில், "உண்மையை மறைக்கலாம். ஆனால், ஒருபோதும் ஒடுக்க முடியாது' என்ற புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பவன், "அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் உண்மையை விரைவில் பகிர்ந்துகொள்வேன். நான் அனுபவித்தது வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது. முக்கியமாக ரசிகர்களின் உணர்வுகளை ஏமாற்றக்கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us