/indian-express-tamil/media/media_files/2025/10/15/pkl-12-playoffs-qualification-scenarios-chances-for-tamil-thalaivas-tamil-news-2025-10-15-21-29-20.jpg)
தமிழ் தலைவாஸ் அணி கடைசியாக 2022 ஆம் ஆண்டு நடந்த தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் பிறகு நடந்த சீசன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடந்து வருகிறது. இந்த கடைசி கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த சீசன்கள் வரை, புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். ஆனால், இந்த 12-வது சீசனில், போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்க ஒரு புதிய 'பிளே-இன்' (Play-in) என்ற தகுதிச் சுற்று விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக பிளே-ஆஃப் (Play-offs) சுற்றுக்குத் தகுதி பெறும். 5, 6, 7 மற்றும் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள், 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்த 'பிளே-இன்' சுற்றில், 5-வது இடத்தில் உள்ள அணி 8-வது இடத்தில் உள்ள அணியுடனும், 6-வது இடத்தில் உள்ள அணி 7-வது இடத்தில் உள்ள அணியுடனும் மோதும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள், பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
தற்போதைய நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் புனேரி பல்தான் (24 புள்ளிகள்) மற்றும் டபாங் டெல்லி (24 புள்ளிகள்) வலுவாக உள்ளன. அவர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு டைட்டன்ஸ் (16 புள்ளிகள்) மற்றும் பெங்களூரு புல்ஸ் (16 புள்ளிகள்) முதல் நான்கு இடங்களுக்குள் இருக்கின்றன. 5 முதல் 8-வது இடம் வரை கடும் போட்டி நிலவுகிறது. இந்த இடங்களில் யு மும்பா (14 புள்ளிகள்), ஹரியானா ஸ்டீலர்ஸ் (14 புள்ளிகள்), தமிழ் தலைவாஸ் (12 புள்ளிகள்) மற்றும் உ.பி யோதாஸ் (12 புள்ளிகள்) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பிளே-ஆஃப் சுற்றைப் பொறுத்தவரையில், முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் கிட்டத்தட்ட பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. அதனால், புனேரி பல்தான் மற்றும் டபாங் டெல்லி அணிகள் முதல் 4 இடங்களுக்குள் இடம் பிடித்து விடும். தெலுங்கு டைட்டன்ஸ் மீதமுள்ள 5 போட்டிகளில் 3-ல் வென்றால் போதுமானதாக இருக்கும். இதேபோல், பெங்களூரு புல்ஸ் அணியும் மீதமுள்ள 4 போட்டிகளில் 3-ல் வென்றால் போதும்.
அதேநேரத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் மீதமுள்ள 4 போட்டியில் 3-ல் வென்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது. ஆனால், அந்த அணிக்கு முந்தைய இடத்தில் இருக்கும் யு மும்பா மீதமுள்ள 4 போட்டியிலும் வென்றாக வேண்டும். இதேபோல், தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி யோதாஸ் அணிகள் மீதமுள்ள 3 போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
தமிழ் தலைவாஸ் அணி கடைசியாக 2022 ஆம் ஆண்டு நடந்த தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் பிறகு நடந்த சீசன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறியது. அந்த அணி நேற்று செவ்வாய்க்கிழமை உ.பி யோதாஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இன்று புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடரும்.
குஜராத் ஜெயண்ட்ஸ் புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. அதனால் இப்போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், அது தமிழ் தலைவாஸ் அணியின் பிளே-ஆஃப் கனவில் விரிசலை ஏற்படுத்தும். எனவே, தமிழ் தலைவாஸ் அணிக்கு இனி வரும் போட்டிகள் பாதாளத்தின் இரு முனையில் கட்டப்பட்ட கயிறு மீது நடப்பு போல் இருக்கும். மதில் மேல் இருக்கும் பூனையாக உள்ள தமிழ் தலைவாஸ் அதனைத் தாண்டி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.