/indian-express-tamil/media/media_files/2025/09/30/pkl-season-12-returns-to-chennai-tamil-thalaivas-vs-u-mumba-tamil-news-2025-09-30-08-20-32.jpg)
புரோ கபடி தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 37- 28 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் களமாடி வரும் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் இதுவரை 9 போட்டிகளில் ஆடி 4-ல் வெற்றி 5-ல் தோல்வி என புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், நாளை புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் யு - மும்பா அணியுடன் மோதுகிறது.
நடப்பு சீசனை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றியை ருசித்தது. அதன்பிறகு 33-36 என யு மும்பை அணியிடமும், 28-37 என குஜராத் ஜெயண்ட்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது. இந்த தோல்வியில் இருந்து மீள கடுமையாக போராடி பெங்கால் வாரியர்ஸ் அணியை 46-36 என்கிற கணக்கில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் 35-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.
இதன்பிறகு, தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியிடம் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக, தெலுங்கு டைட்டன்ஸ் அணி 43-29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இந்தத் தோல்வியில் இருந்து மீள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக போராடிய தமிழ் தலைவாஸ் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் (38-36) தோல்வியைத் தழுவியது. இதன்பிறகு நடந்த உ.பி யோதாசுக்கு எதிரான போட்டியில் 39-22 என படு தோல்வியைச் சந்தித்தது.
தொடர்ந்து நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 37- 28 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற 2-ம் கட்ட லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள சூழலில், புரோ கபடி தொடரின் 3-ம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. நேற்று திங்கள்கிழமை (செப்டம்பர் 29) முதல் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் தமிழ் தலைவாஸ் தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் எஸ்.டி.ஏ.டி பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் யு-மும்பா அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நடந்த ஆட்டத்தில் யு - மும்பா-விடம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட தமிழ் தலைவாஸ் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த அணி ரசிகர்களின் ஆதாராவோடு அங்கு மோதும் 4 போட்டியையும் சிறப்பாக முடிக்கும் எனவும் ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். எனவே, சென்னையில் நடைபெறும் தமிழ் தலைவாஸ் அணியின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.