கப்பு முக்கியம் ரோகித்து... இவர்தான் அடுத்த குளோபல் ஸ்டார்: வர்ணனையாளர் முத்து பேட்டி

"துபாயில் இந்தியா ஆடுவது சாதகமா? என்றால், நிச்சயம் சாதகம் என்று சொல்வேன். ஆனால், சிலர் புலம்பித் தள்ளும் அளவுக்கு சாதகம் கிடையாது. ஏனெனில், இந்திய அணி பாகிஸ்தான் செல்லாததற்கு உள்ளார்ந்த காரணங்கள் இருக்கிறது." என்று முத்து கூறினார்.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pradeep Muthu cricket commentator on India vs New Zealand ICC Champions Trophy 2025 Final in tamil

இந்தியா - நியூசிலாந்து மோதும் இறுதிப்போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.

ச. மார்ட்டின் ஜெயராஜ்.

Advertisment

9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டியில்  இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு துபாயில் தொடங்கி நடக்கிறது. 

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து மோதும் இறுதிப்போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை 'தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். 

இந்தியா - நியூசிலாந்து என்கிற இரு சமபலம் பொருந்திய அணிகளின் மோதல் துபாய் களத்தில் எப்படி இருக்கும் என்பதை அறிய அவரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். அவரிடம் துபாய் ஆடுகளம் இந்தியாவுக்கு சாதகம் என்று பேசப்படுவது பற்றி கேட்டோம். அதற்கு  அவர், "துபாயில் இந்தியா ஆடுவது சாதகமா? என்றால், நிச்சயம் சாதகம் என்று சொல்வேன். ஆனால், சிலர் புலம்பித் தள்ளும் அளவுக்கு சாதகம் கிடையாது. ஏனெனில், இந்திய அணி பாகிஸ்தான் செல்லாததற்கு உள்ளார்ந்த காரணங்கள் இருக்கிறது. இதையெல்லாம், கருத்தில் கொண்டு தான் ஐ.சி.சி போட்டி அட்டவணையை தயார் செய்திருக்கிறார்கள். அதனால், அதுபற்றி புகார் சொல்வது என்பது  தேவையில்லாதது என்றுதான் நான் நினைக்கிறேன்.  

Advertisment
Advertisements

இதற்கு முன்பு கூட 2022 ஆசிய கோப்பை துபாயில் நடந்திருக்கிறது. தவிர, துபாய் ஆடுகளத்தில் அனைத்து அணிகளுமே முன்னர் விளையாடிய  அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள். இந்த தொடரில் ஆடும் அணி வீரர்களில் பலரும் ஐ.எல் டி20 லீக் உள்ளிட்ட பல்வேறு தொடருக்காக அங்கு சென்று ஆடியுள்ளார்கள். எனவே, துபாயில் ஆடுவது இந்தியாவுக்கு மட்டும் சாதகம் என்று கூறமுடியாது. குறிப்பாக பார்க்கவேண்டியது என்னவென்றால், நடப்பு  தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி உள்ளார்கள். அதனால்தான் அவர்கள் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்." என்று கூறினார்.  

இந்தியா - நியூசிலாந்து போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று முத்துவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், "இறுதிப் போட்டியை பொறுத்தவரையில், பேட்டிங்கில் இரு அணிகளுமே சம பலத்துடன் இருக்கிறார்கள் என சொல்லாம். இங்கே கோலி என்றால், அங்கே கேன் வில்லியம்சன் இருக்கிறார். இங்கே ரோகித் சர்மா என்றால்,  அங்கே ரச்சின் ரவீந்திரா இருக்கிறார். இங்கே ஒரு ஹர்திக் பாண்டியா என்றால், அங்கே ஒரு க்ளென் பிலிப்ஸ் இருக்கிறார். அதனால், பேட்டிங்கில் இரு அணிகளுமே சம நிலையில் இருக்கிறார்கள். 

இரு அணிகளுக்கும் இடையே எங்கே வித்தியாசம் இருக்கிறது என்றால், ஸ்பின் குவாலிட்டி தான்.  தரமான சுழல் பந்துவீச்சுக்கு நியூசிலாந்தில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அந்த அணியில் க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் இருந்தாலும், இந்தியா அளவுக்கு தரமான ஸ்பின்னர்கள் இல்லை. இந்தியாவில் அக்சர் படேல், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, குலதீப் போன்றவர்கள் இருக்கிறார்கள். அதனால், இந்திய கேப்டனால் இவர்களுக்கு 40 ஓவர்களையும் வழங்க முடியும். இவர்களில் யாரும் பகுதிநேர ஸ்பின்னர்கள் கிடையாது. அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். 

ஆனால், இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை, இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். ஏனெனில், இது இறுதிப் போட்டி. இந்தப் போட்டியில் அழுத்தத்தை சமாளிக்கும் அணி தான் வெற்றி பெறும். பவுலிங் விருப்பங்கள் அதிகம் இருப்பதால், இந்தியாவின் கை ஓங்கி இருக்கும். ஏனென்றால், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பல கருப்பு பக்கங்களை காட்டியுள்ளது.

துபாயில் பந்து திரும்புகிறது. அப்படி இப்படி என பேசினார்கள். ஆனால், தொடரில் அதிக விக்கெட் எடுத்தவராக ஷமி தான் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்துவதில் கவனம் செலுத்துவார். சுழலில் வருண் சக்கரவர்த்தி மிரட்டி வருகிறார். இதே துபாய் ஆடுகளத்தில் வரும் பெரும் பின்னடைவை சந்தித்தார். ஆனால், தற்போது ரோகித்துக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லம் அவரை அழைத்து பவுலிங் கொடுக்கிறார். 

மொத்தமாக இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக ஆடுகிறார்கள். இளம் வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜடேஜாவுக்கு அதிக அளவில் பேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால், அக்சரை 5-வது பேட்டராக களமிறக்கியது நல்ல நகர்வு என்பேன். அவர் வெறும் அக்சர் படேல் கிடையாது, 'சிக்ஸர்' படேல் என்று கூறலாம். அவ்வளவு சிறப்பாக பேட்டிங் அடுக்கிறர்." என்றார்.  

துபாய் ஆடுகளம் குறித்து அவர் விவரிக்கையில், "இது  ஸ்பின்னர்களுக்கு நிச்சயமாக உதவுகிறது. அதனால், முதலில் பேட்டிங் ஆடும் அணி 250 ரன்னில் இருந்து 270 ரன்கள் வரை எடுக்கலாம். எனவே, சேசிங் செய்யும் அணி கொஞ்சம் சிரமப்படலாம். போட்டி செல்லச் செல்ல ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு அதிகம் உதவும். அரையிறுதியில் இந்தியா சேசிங் செய்தது. ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் ஆடி 300 ரன்களுக்கு மேல் எடுத்தால், சேசிங் செய்வதில் நியூசிலாந்து அதிக கஷ்டப்படலாம்." என்று குறிப்பிட்டார். 

ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றால், அந்த அணியையும் அவர்களது வீரர்களையும் ரசிகர்களால் வெறுக்க முடியாது. அப்படியான குணாசியத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட் முதல் தற்போது சி.எஸ்.கே-வின் தலைமை பயிற்சியாளராக இருக்கும்  ஸ்டீபன் பிளெமிங் வரை வீண் விளம்பரம் தேடும் மனிதர்களாக இல்லை. மாறாக, திரைமறைவில்  தங்களால் முடிந்தவரை அணியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களாக இருக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸின் டேலண்ட் ஸ்கவுட்டராக இருந்த ஜான் ரைட் பும்ரா எனும் கரடுமுரடான வைரத்தை கோஹினூர் வைரம் போல் பட்டை தீட்டினர். இதேபோல், சி.எஸ்.கே-வில் ஸ்டீபன் பிளெமிங் பட்டறையில் பல முன்னணி வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். 5 முறை சாம்பியன் பட்டம் வென்றாலும் அதுபற்றி ஒருபோதும் அவர் பகட்டிக் கொள்ளவில்ல்லை 

அவர்கள் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வருகிறார்கள். இது அவர்களது கலாச்சாரத்தில் வெளிப்படுகிறது. அன்பான பண்பான மக்களாக இருக்கிறார்கள். விருந்தோம்பல் எனும் தமிழ் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்து நம் மக்களை அதிகம் ஈர்ப்பவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை விட, நியூசிலாந்து அனைவரும் வசிக்க விரும்பும் நாடாக உருவெடுத்து வருகிறது. ஆஸ்திரேலியாவைப் போலவே, கிரிக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து வித விளையாட்டுக்கும் அங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழு விளையாட்டில் அவர்களின் நட்புறவு, மற்ற அணிகளை மிஞ்சுகிறது. அதனால்தான் என்னவோ, அந்த நாட்டையும், அங்கு வசிக்கும் மக்களையும் பலரும் அதிகம் விரும்புகிறார்கள். 

நம் கண்முன்னே இருக்கும் உதாரணமாக, அவர்கள் நாட்டை பிரதிநிதித்துவம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். எந்த சர்ச்சையில் அவர்கள் சிக்கியது இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்கள். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அதிருப்தி கொடுத்து இருந்தாலும், தங்களது வெற்றிக்களிப்பு மூலம் இந்திய அணி வீரர்களின் மனம் புண்படும் விதமாக நடந்து கொண்டது கிடையாது. உற்சாகத்தைக் கூட அவர்கள் களத்தில் பெரிய அளவில் வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து மற்ற நாட்டு வீரர்கள் கற்றுக் கொள்ள பல குணாதிசயங்களை விட்டுச் செல்கிறார்கள். 

கிரிக்கெட்டுக்கு வெளியில் இருந்து இவ்வளவு கவனித்துள்ள நாம், கிரிக்கெட்டுக்கு உள்ளே இருந்து, 
நியூசிலாந்து வீரர்களிடம் நேரடியாக பேசிய, பழகிய அனுபவத்தை கொண்ட வர்ணனையாளர் முத்துவிடம், நாம் கேள்விப்படுவதும், பார்ப்பதும் உண்மைதானா? என்று வினவினோம். அதற்கு அவர், "இந்தியாவில் பலருக்கும் 2-வது பிடித்த அணி எதுவென்றால், அது நியூசிலாந்து அணி தான். அந்த அணியின் வீரர்களும் அப்படித்தான். வர்ணனையில், கேன் வில்லியம்சனை பார்க்கும் போதெல்லாம், 'ஒவ்வொரு மாமியாருக்கும் இப்படிப்பட்ட மருமகன் தான் இருக்க வேண்டும்' என்றும் சொல்வேன். அந்த அளவுக்கு மிகச் சிறந்த மனிதர் அவர். மிகவும் அமைதியானவர். தன்னடக்கமுள்ள, தற்பெருமை கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒருவர். அவரைப் போல் தான் அவரது மொத்த நாடுமே இருக்கிறார்கள். எல்லோருமே தங்கமான பசங்க. இதேபோல் தான் மிகச்சிறந்த இடது கைது வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அலட்டிக் கொள்ளாத மனிதர் அவர். 

இவர்களைப் போல் தான் தற்போது நியூசிலாந்து அணியில் கலக்கி வரும் ரச்சின் ரவீந்திரா. ஒருநாள் இந்தியாவின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர் சாருடன் வர்ணனையில் இருந்தேன். அப்போது அவர், சர்வதேச கிரிக்கெட்டில் ரச்சினின் வளர்ச்சி பற்றி சொன்னார். ரச்சின் கடந்த 5 ஆண்டுகளில்பலமுறை  இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள பயிற்சியாளர்களிடம் ஒவ்வொரு சூழலுக்கும் எப்படி ஆட வேண்டும் என்பதை பயிற்சி பெற்றதாக அவர் சொல்வார். அப்படி பார்க்கையில், அடுத்த 'குளோபல் சூப்பர் ஸ்டார்' ரச்சின் ரவீந்திரா தான்.  

நியூசிலாந்தில் தான் குறைவான கிரிக்கெட்டர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு குவாலிட்டியான வீரர்களை உருவாக்கி வருகிறார்கள். உலக அளவில் எந்த லீக்கை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் ஆடி வருகிறார்கள். சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்கள். நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிசுடன் நான் பழகியது உண்டு. அவர் சி.எஸ்.கே அணியாகவும் விளையாடி இருக்கிறார். அவர் மிகவும் எளிமையாக பழக்கூடியவர். இரண்டு மூன்று ஐ.பி.எல் அணிகளிலும் அவர் ஆடி இருக்கிறார். அவர் எப்போதுமே ஒன்று சொல்வது உண்டு. அதாவது, 'சி.எஸ்.கே அணி கொடுத்த உணர்ச்சி வேறு எந்த அணியும் கொடுத்தது கிடையாது' என்பார். அவரது குடும்பத்தினர் நியூசிலாந்தில் சென்னை வரும் போது, அவர்களுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் போட்டுள்ளது சி.எஸ்.கே நிர்வாகம். அதனை அவர் பெருமையாகச் சொன்னார். ஏனெனில், அவரது குடும்பத்தினர் அதுவரை பிசினஸ் கிளாசில் பயணித்ததே கிடையாதாம். 

டி.என்.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு நான், நானி மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் என மூவரும் காரில் சென்றோம். அப்போது, காரின் முன் இருக்கையில் ஸ்டைரிஸ் உட்கார்ந்தார். நாங்கள் அவரிடம் தமிழ் பாடல் கேட்க இருக்கிறோம் என்று சொன்னோம். அவர் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார். நாங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இளையராஜாவின் 90'ஸ் பாடல்களை போட்டுக் கொண்டு ரசித்து வந்தோம். இடையில், ஸ்டைரிஸ் இருக்கிறாரே என்பதற்காக நானி ஆங்கில பாடல்களை போட்டார். ஆனால் ஸ்டைரிஸ், 'உங்கள் பாடல்களை கேட்டு என்ஜாய் பண்ணுங்கள், எனக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை' என்று அவர் சொன்னார்.  அந்த அளவிற்கு அவர் தங்கமான மனிதர். நான் பழகி மற்ற நியூசிலாந்து வீரர்களும் அப்படித்தான். 

சி.எஸ்.கே பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் கூட அப்படித்தான். அணியில் அவரது இடத்தை இதுவரை யாரும் பிடிக்கவில்லை. ஐ.பி.எல் தொடங்கிய இத்தனை ஆண்டுகளில் மற்ற அணிகளின் பயிற்சியாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர் மட்டும்தான் சி.எஸ்.கே அணியில் இன்றுவரை பணியாற்றி வருகிறார். அதனால், நியூசிலாந்து அணியை யாராலும் வெறுக்க முடியாது." என்று அவர் கூறினார். 

நடப்பு சாம்பியன்ஷிப் தொடர் பற்றி மேலும் பேசிய முத்து, "இந்த தொடரில் எனக்கு வருத்தம் அளிக்கும் விஷயம், பாகிஸ்தானின் வீழ்ச்சி. சர்வதேச கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்த அணி, இப்போது ரொம்பவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்கள். உட்க்கட்சி பூசல் போல், ஒரு வீரர் மற்ற வீரர்களிடம் பேசுவது இல்லை எனக் கேள்விப்படுகிறோம். அவர்களின் அணி சிறப்பாக செயல்பட்டால் உலக கிரிக்கெட் நன்றாக இருக்கும். ஏற்கனவே, வெஸ்ட் இண்டீஸ், ஸ்ரீலங்கா போன்ற பலம் பொருந்திய அணிகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்து விட்டு வர வேண்டும். அப்போது கிரிக்கெட் பார்ப்பதற்கு இன்னும் அற்புதமாக இருக்கும்.  

பாகிஸ்தான் போல் தான் தென் ஆப்ரிக்க அணியும் செயல்பட்டு இருக்கிறார்கள். துபாயில் ஆடுவது இந்தியாவுக்குத் தான் சாதகம் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் அதிகம் டிராவல் செய்தார்கள். துபாய் சென்று கிரிக்கெட் ஆடாமல் திரும்பி  வந்தார்கள். அதில் மறுப்பு  இல்லை. ஆனால், மாடர்ன் டே கிரிக்கெட்டில் எல்லாமே அப்படித்தான் இருக்கும். 2023 உலகக்கோப்பை இந்தியாவில் நடந்தபோது, இந்திய அணி 9 நகரங்களுக்கு பயணித்து ஆடியது. அதுதான் மாடர்ன் டே கிரிக்கெட். அதற்கு தகுந்தார்போல் போல் தான் நீங்கள் செயல்பட வேண்டும். 

இத்தொடரில் நான் ரசித்த வீரர் க்ளென் பிலிப்ஸ். கிரிக்கெட் ஆடுவதற்காகவே அவர் பிறந்துள்ளார். தாவித் தாவி அவ்வளவு சிறப்பாக பீல்டிங் செய்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இடது கையில் கேட்ச் எடுக்கிறார். இந்தியாவுக்கு எதிராக வலது கையில் கேட்ச் எடுத்து கோலி விக்கெட்டை வீழ்த்த உதவுகிறார். அவரது கிரிக்கெட்டை நான் அதிகம் என்ஜாய் செய்தேன். இதேபோல், ரச்சின் ரவீந்திராவின் ஆட்டத்தையும் அதிகம் ரசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த வீரராக அவர் இருக்கிறார். நியூசிலாந்து அணிக்காக அவர் இடது கை சுழற்பந்து வீச்சாளராக வந்தார். 7-வது இடத்தில் பேட்டிங் ஆடினார். மற்ற வீரர்கள் போல்தான் அவரை நினைத்தேன். ஆனால், அவர் தற்போது 5 சதம் விளாசி இருக்கிறார். அதுவும் ஐ.சி.சி நடத்திய தொடரில் விளாசி அசத்தி இருக்கிறார். பொதுவாக நியூசிலாந்து வீரர்களுக்கு ஆசிய கண்டத்தில் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது புரியாது. ஆனால், ரச்சின் அத்தனை ஆடுகளத்தையும் கணித்து ஆடி வருகிறார். 

பவுலிங்கில் தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜான்சன் சிறப்பாக இருந்தார். சில ஆட்டங்களைத் தவிர, அவர் நன்றாகவே  ஆடினார். எதிர்காலத்தில் அவர் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக இருப்பார். தவிர, இந்திய அணியில் ஷ்ரேயாஸ்  சிறப்பாக ஆடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் அவர். ஷார்ட் பந்து பிரச்சனையை சமாளித்து உள்ளார். அவரது ரோலில் அவர் சிறப்பாக செயல்பட்டு  இருக்கிறார்." என்று அவர் கூறினார்.  

இந்திய அணியில் ரோகித், கோலியின் எதிர்காலம்  பற்றி முத்து பேசுகையில்,  "அடுத்த உலகக் கோப்பை வரை கோலி இருப்பார். அதில்  சந்தேகம்  இல்லை. ரோகித் ஃபிட்டாக இருந்தால் அவரும் இருப்பார். இந்திய அணியில் இருப்பது தான் அவரின் ஆசையாய் இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில் இருந்து தனக்கென ஒரு சூத்திரத்தை வகுத்து ஆடி வருகிறார் ரோகித். முன்பெல்லாம் 200 ரன்கள் அடித்தார். இப்போது 10 ஓவர்களில் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அந்த ரோலைப் பொறுத்தவரை அவர் அணியில் தொடர்ந்து இருக்கலாம்." என்று அவர் தெரிவித்தார். 

India Vs New Zealand Champions Trophy Pradeep Muthu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: