Advertisment

சாதகம் கே.கே.ஆருக்கு... பாதகத்தை ஏற்படுத்துமா எஸ்.ஆர்.எச்? வர்ணனையாளர் முத்துவின் சுவாரசிய பதில்!

"இந்த சீசனில் பெஸ்ட் அணியாக கே.கே.ஆர் இருந்துள்ளார்கள். ஆனால், எஸ்.ஆர்.எச் அணியில் யாரவது இரண்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் கே.கே.ஆரை சாய்க்க முடியும்" என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து கூறினார்.

author-image
Martin Jeyaraj
New Update
 Pradeep Muthu on KKR vs SRH IPL final 2024 Tamil News

ஐ.பி.எல் 2024 தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடந்துகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ச. மார்ட்டின் ஜெயராஜ் 

Advertisment

Pradeep Muthu | IPL 2024 | Kolkata Knight Riders | Sunrisers Hyderabad: இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா அதன் இறுதி நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தத் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( கே.கே.ஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ்.ஆர்.எச்) அணிகள் பலப்பரீட்சை நடந்துகின்றன. 

ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 முறை (2012, 2014) சாம்பியன் பட்டத்தை வாகை சூடியிருக்கும் கொல்கத்தா 3-வது முறையாக கோப்பையை உயர்த்துமா? அல்லது ஒருமுறை (2016) சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத் அணி 2-வது முறையாக கோப்பையை முத்தமிடுமா? என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. 

அவ்வகையில், இவ்விரு அணிகளில் எந்த அணிக்கு ஐ.பி.எல். 2024-ல் சாம்பியன் ஆகும் வாய்ப்பு அதிகம்? யார் தலைமையிலான அணி வெற்றியை ருசிக்கும்? என்கிற நேரடி கேள்விகளுடன் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் முத்துவை தொடர்பு கொண்டு பேசினோம். இதுபற்றி அவர் நம்மிடம் பேசுகையில், "இந்த சீசனில் பெஸ்ட் அணியாக கே.கே.ஆர் இருந்துள்ளார்கள். ஆனால், எஸ்.ஆர்.எச் அணியில் யாரவது இரண்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் கே.கே.ஆரை சாய்க்க முடியும். இருப்பினும், தற்போதுள்ள எல்லா சூழலிலும் கே.கே.ஆருக்குத் தான் அதிக சாதகம் நிலவுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் ஏற்கனவே எஸ்.ஆர்.எச்-க்கு எதிராக ஆடிய 2 போட்டியிலும் வென்றுள்ளார்கள். அதனால், எல்லாமே அவர்களுக்கு தான் சாதகமாக இருக்கிறது. 

ஃபிளாட்டான பிட்ச் என்றால், முடிவு எஸ்.ஆர்.எச் அணிக்கு சாதகமாக வரும். ஆனால், சென்னையின் மற்ற எந்த பிட்ச் ஆக இருந்தாலும் கே.கே.ஆருக்கே பலம் அதிகம். அந்த அணி கடைசியாக ஆடிய ஆட்டங்களில் சறுக்கவே இல்லை. அது அவர்களின் கூடுதல் பலம் என்று சொல்லாம். 

இந்த சீசனில் எஸ்.ஆர்.எச் அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்திய விதம் என்னை அதிகம் ஈர்க்கிறது. அவர்களின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அசத்தலாக இருக்கிறார். ஃபைனல் என வந்தால் அவர் ஃபயராக இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் செஞ்சுரி, ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் செஞ்சுரி என ஃபைனலுக்கான பொருத்தமான வீரர் அவர். கே.கே.ஆரின் மிட்சல் ஸ்டார்க் வீசும் முதல் ஓவரை அவர் தாண்டி விட்டால், டிராவிஸ் ஹெட்-டின் ஸ்பெஷலை நாம் பார்க்கலாம். 

என்னைப் பொறுத்தவரையில், பெர்ஃபெக்டாக இருக்கும் டீம் தான் ஜெயிச்சது என்பது இல்லை. கடந்த சீசனில் 2 மேட்சுகளில் குஜராத்திடம் சி.எஸ்.கே தோற்றுப் போனது. ஆனால், ஃபைனலில் சி.எஸ்.கே தான் வென்றது. எனவே, இறுதிப்போட்டி என வரும் போது ஆச்சரியங்கள் அரங்கேறி இருக்கிறது. இவ்வளவு நாட்கள் நீங்கள் எப்படி ஆடினீர்கள் என்பது கணக்கல்ல. அழுத்தம் நிறைய இருக்கும் அன்றைய நாள் போட்டியில் யார் தைரியமாக செயல்படுகிறார்கள் என்பது தான் முக்கியம். 

குவாலிஃபையர் 2-இல் எஸ்.ஆர்.எச்-க்கு ஷாபாஸ் அகமது வந்திருக்க கூடாது, மயங்க் மார்க்கண்டே தான் வந்திருக்க வேண்டும். ஆனால், பேட்டிங் இம்பாக்ட் பிளேயராக கிளாசெனுடன் பார்ட்னர்ஷிப் போட வந்த ஷாபாஸ், மேன் ஆப் தி மேட்ச் பெர்ஃபாமென்ஸ் காட்டினார். அதனால், அவரை இறுதிப் போட்டிக்கான அணியில் இருந்து கழற்றி விட முடியாது. எஸ்.ஆர்.எச் முதலில் பேட்டிங் ஆடினால், ஷாபாஸ் உள்ளே இருப்பார், உனட்கட் வெளியே இருப்பார். 

கே.கே.ஆரைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களிடம் இருக்கும் வீரர்கள் நன்றாக செயல்பட்டாலே போதும். இந்த சீசனில் வருண் சக்கரவர்த்தி ரொம்ப புத்திசாலித்தனமான பவுலிங் செய்துள்ளார். ஒரு தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகனாக, இந்தப் பக்கம் வருண் சக்கரவர்த்தியும், அந்தப் பக்கம் நடராஜனும் இருக்கிறார்கள். ரெண்டு பேருமே தங்கமாக பவுலிங் போட்டுள்ளார்கள். தங்களது அணிக்கு முக்கியமான கட்டத்தில் முக்கியமான விக்கெட்டை வீழ்த்திட காரணமாக இருந்துள்ளார்கள். இதில் யாரு ஜெயிச்சாலும் நமக்கு சந்தோஷம் தான். 

ஐ.பி.எல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேப்டன்களாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். ஷேன் வார்ன், ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் என இவர்களின் வரிசையில் பேட் கம்மின்சும் இடம் பிடிக்க தகுதியான வீரர் என்பேன். சென்னையில் தான் அவரது உலகக் கோப்பை பயணம் தொடங்கியது. அப்போது ஆரம்பித்த அவரது பயணத்தில் உலகக் கோப்பையை வென்று விட்டு, இப்போது அடுத்த பெரிய ஃபைனலுக்கு மீண்டும் சென்னைக்கே வந்துள்ளார். இதிலும் கோப்பையை வென்றால், அவருக்கான சிறந்த பிரியாவிடையாக இது இருக்கும். 

கம்மின்ஸ் ஒரு வெளிநாட்டு வீரராக இருந்தாலும், அணியை அவ்வளவு அழகாகவும், திறம்படவும் வழிநடத்தி இருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவரது கேப்டன்சியை இன்னும் அதிகமாகவே ரசிக்கிறேன். லீடர்ஷிப் குறித்து அப்துல் காலம் குறிப்பிடும் போது, "take the blame share the same" என்பார். அதாவது, தவறாக போனால் பழியை நீ எடுத்துக்கொள், எல்லாம் சரியாகப் போனால் எல்லாரிடமும் பகிர்ந்து கொள் என்பது தான் அதன் அர்த்தம். அதற்கு ஏற்றால் போல், அன்று ஷாபாஸ் சிறப்பாக ஆடினார். அவரை பேட் செய்ய அனுப்பும் முடிவு யாருடையது என கம்மின்ஸிடம் கேட்டபோது, அது பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியின் முடிவு என்றார். அந்த முடிவு தன்னுடையது தான் என்று அவர் சொந்தம் கொண்டாடவில்லை. 

இந்த தொடர் முழுதும் நடராஜனை அடிக்கடி பேட்டி எடுத்திருக்கிறேன். அவர் கம்மின்சை புகழ்ந்து பேசுவார். சில போட்டிகளில் அவர் சிறப்பாக பவுலிங் போடாத போது, கம்மின்ஸ் தானும் ஒரு பவுலராக அவரின் கஷ்டத்தை நன்றாக புரிந்து கொள்வதாக அவரிடம் கூறியிருக்கிறார். 'ஒரு சில நாள் நமக்கு என்று அமையும், ஒரு சில நாள் நாம் நினைக்கும் இடத்தில் பந்து பிட்ச் ஆகாது. இந்த மாறி ஒருநாள் அமையும், அதை கடந்து போகலாம்' என்று அவரின் தோளில் கைபோட்டு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்துவார். ஏன்னென்றால், ஒரு பவுலராக அவருக்கும் இதெல்லாம் நடந்துள்ளது. அதனால் அவர் சக பவுலர்களின் வலியை புரிந்து கொள்கிறார். 

இதேபோல், கே.கே.ஆர் அணிக்காக ஷ்ரேயாசும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ரெண்டு வெவ்வேறு அணிகளை ஃபைனல்சுக்கு அழைத்துக்கொண்டு வந்த ஒரே இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் தான். தோனி, ரோகித்துக்குப் பிறகு ஐ.பி.எல்-லில் திறம்பட செயல்படும் கேப்டனாக அவர் இருக்கிறார். அவருடன் அணியின் ஆலோசகர் கம்பீரும் அணியை அவ்வளவு சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார் என்பேன். 

கம்பீர் அடிக்கடி ஒன்று சொல்வார், அதாவது நல்ல டீமுக்கு கேப்டனே தேவையில்லை. அத்துடன், அவர் எப்போதும் சொல்லும் கிரிக்கெட் தத்துவம், கேப்டன்சி என்பது மிகைப்படுத்தப்பட்டது. இதை அவர் கே.கே.ஆருக்காக கோப்பை வென்ற போது கூட சொன்னார். 

கே.கே.ஆர் வெற்றிக்கு, ஷ்ரேயாஸ் - கம்பீருக்கு இணையான பெருமை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்-டுக்கும் சேரும். அந்த அணியில் இருக்கும் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு உள்ளார்கள். வெங்கடேஷ் ஐயர், ரஸ்ஸல், நரைன் போன்ற வீரர்கள் நன்றாக ஆடியுள்ளார்கள். அவர்கள் தான் கோப்பை வெல்லத் தகுதியானார்கள். ஆனால், எஸ்.ஆர்.எச் ஆச்சரியப்படுத்துவார்கள்." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sunrisers Hyderabad Kolkata Knight Riders IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment