புரோ கபடி லீக் தொடரில் நேற்று (ஞாயிறு) இரவு எட்டு மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின. நாக்பூரில் உள்ள மன்காபூர் உள் அரங்கத்தில் இந்தப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், பாட்னா பைரேட்ஸ் அணி, 46-32 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிப் பெற்று, தொடர்ந்து இந்த சீசனில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பாட்னா அணி, அனைத்திலும் எதிரணிகளை துவம்சம் செய்து வெற்றிப் பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் பாட்னா சார்பில், பர்தீப் நர்வால் 15 புள்ளிகளைக் கைப்பற்றினார். ரெய்டில், பாட்னா 24 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் 22 புள்ளிகளும் எடுத்து ஓரளவிற்கு சம நிலையில் தான் விளையாடின. ஆனால், வீரர்களை மடக்குவதில் பாட்னா 12 புள்ளிகளை குவித்தது. பெங்களூரு 4 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.
இதற்கு முன் தெலுகு டைட்டன்ஸ் அணியை 43-36 என்ற புள்ளிக் கணக்கிலும், அதே அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த மற்றொரு போட்டியில், 29-35 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசமாக்கியுள்ளது பாட்னா. இதனால், நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணியாக பாட்னா பைரேட்ஸ் அணி உருவாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில், பெங்கால் வாரியஸ் அணியும், யு.பி. யோதா அணியும் களம் கண்டன. நாக்பூரில் மன்காபூர் உள் அரங்கத்தில் தான் இப்போட்டியும் நடைபெற்றது.
இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40-20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் யு.பி. அணியை தவிடுபொடியாக்கியது. மொத்தம் 22 ரெய்ட் புள்ளிகளையும், 9 டாக்கில் புள்ளிகளையும், 6 ஆல் அவுட் பாயின்ட்களையும் பெங்கால் அணி குவித்தது. மேலும், உதிரிகள் வகையிலும் 4 புள்ளிகள் அந்த அணிக்கு கிடைத்தது. இதன்மூலம், தான் விளையாடிய இரண்டு போட்டிகளையும் பெங்கால் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.