புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன், கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. புதிய அணிகள் உட்பட மொத்தம் 12 அணிகள் கோதாவில் குதித்தன. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் புதிய அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
மூன்று மாத காலம் நடைபெற்ற இந்த கபடித் தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்.,28) இரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சுகேஷ் ஹெக்டே தலைமையிலான அறிமுக அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்அணி, 22 லீக் ஆட்டங்களில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிராவுடன் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக அடியெடுத்து வைத்தது. இத்தொடரில் குறைந்த ஆட்டங்களில்(4) தோல்விப் பெற்ற அணி குஜராத் மட்டும் தான்.
பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணி, 22 லீக் ஆட்டங்களில் 10 வெற்றி, 7 தோல்வி, 5 டிராவுடன் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘பிளே-ஆப்’ சுற்றில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ் அணிகளை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டியது. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 2 முறையும், பாட்னா அணி ஒரு முறையும் வெற்றி பெற்றன.
கடந்த 2 சீசனிலும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். அந்த அணியின் பிரதான பலமே கேப்டன் பர்தீப் நர்வால் தான். அவர் ரைடு மூலம் இதுவரை 350 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். மொனு கோட் ரைடிலும், ஜெய்தீப் கேட்ச் செய்வதிலும் கில்லாடிகள்.
குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியை பொறுத்தவரை, சச்சின் ரைடு செல்வதில் எக்ஸ்பெர்ட். அபோசர் மொகாஜெர், சுனில்குமார் ஆகியோர் தடுப்பு ஆட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர்.
இதனால் ஹாட்ரிக் பட்டத்தை வெல்ல பாட்னாவும், முதல் பட்டத்தை வெல்ல குஜராத்தும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் என்பதால், இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இந்த போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.