புரோ கபடி 2017 லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியை போராடி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வென்றுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. முதலில், டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. அடுத்தடுத்து, இப்போட்டிகளுக்கு வரவேற்பு கிடைக்கவே, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேச அணிகள் களம் கண்டன.
இந்நிலையில், 5-வது புரோ கபடி லீக் போட்டிகள் ஹைதராபாத்தில் கோலாகலாமா தொடங்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெய்ற்று வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த போட்டிகளில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் 27-32 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து, தனது இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் நேற்று மோதியது. நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் பாதியில் 8-23 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி மோசமான நிலையில் இருந்தது. ஆனால், இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடம் இருக்கும் போது, புள்ளிக் கணக்கு 30-31 என்றிருந்தது. இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பான கடைசி நிமிடத்தில், பெங்களூரு வீரர் ரோகித் குமார் வெற்றிகரமாக ரைடு சென்று ஒரு புள்ளி எடுத்தார். அதேபோல், தமிழ் தலைவாஸ் அணி வீரர் பிரபஞ்சனும் ஒரு புள்ளி எடுத்த போது, ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக 31-32 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை போராடி பெங்களூரு புல்ஸ் அணி வென்றது. அறிமுக அணியான தமிழ் தலைவாஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். அதேபோல், பெங்களூரு அணிக்கு இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Pro kabaddi league 2017 bengaluru bulls won tamil thlaivas in one point