scorecardresearch

சென்னையில் புரோ கபடி இறுதிப் போட்டி : பாட்னா தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்

புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

PRO Kabaddi League 2017 Final, Gujarat Fortune Giants, Patna Pirates, Tamil Thalaivas

புரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.

புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசன், கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. புதிய அணிகள் உட்பட மொத்தம் 12 அணிகள் கோதாவில் குதித்தன. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில், லீக் சுற்று முடிவில் புதிய அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

மூன்று மாத காலம் நடைபெற்ற இந்த கபடித் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (அக்.,28) இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சுகேஷ் ஹெக்டே தலைமையிலான அறிமுக அணியான குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ்அணி, 22 லீக் ஆட்டங்களில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிராவுடன் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக அடியெடுத்து வைத்தது. இத்தொடரில் குறைந்த ஆட்டங்களில்(4) தோல்விப் பெற்ற அணி குஜராத் மட்டும் தான்.

பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரேட்ஸ் அணி, 22 லீக் ஆட்டங்களில் 10 வெற்றி, 7 தோல்வி, 5 டிராவுடன் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘பிளே-ஆப்’ சுற்றில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ் அணிகளை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டியது. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 2 முறையும், பாட்னா அணி ஒரு முறையும் வெற்றி பெற்றன.

கடந்த 2 சீசனிலும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரேட்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆரம்பத்தில் பாட்னா அணியைவிட குஜராத் அணியின் கை ஓங்கியிருந்தது. இதனால் தொடக்கத்தில் குஜராத் அணி முன்னிலைப் பெற்றது. ஒரு கட்டத்தில் பாட்னா 6-14 என பின்தங்கியிருந்தது. பின்னர் பாட்னா அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் ஒரே ரைய்டில் 5 புள்ளிகள் எடுத்து திருப்புமுனை ஏற்படுத்தினார். இதனால் முதல் பாதி நேரத்தில் பாட்னா அணி 21-18 என முன்னிலை பெற்றது.

அதன்பிறகு 2-வது பாதி நேரத்திலும் குஜராத் அணியால் மீள முடியவில்லை. இறுதியில் பாட்னா அணி 55- 38 என மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் கூடியிருந்த தமிழக ரசிகர்கள் பெரும்பாலோனோர் பர்தீப் நர்வாலின் ஆட்டத்திற்காகவே பாட்னாவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

வென்ற பாட்னா அணிக்கு பரிசுக் கோப்பையுடன் 3 கோடி ரூபாயும், 2-வது இடம் பெற்ற குஜராத் அணிக்கு ஒன்றரை கோடி ரூபாயும் பரிசாக கிடைத்தன.

 

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Pro kabaddi league 2017 patna pirates champian

Best of Express