என்னதான் பல்வேறு விளையாட்டுகள் இந்தியாவில் இருந்தாலும் கபடி என்றால் அது தனித்துவம் வாய்ந்தது தான். இந்தியாவின் அனைத்து பகுதிகளில் விளையாடப்படுகிறது இந்த கபடி. சிறிது இடம் கிடைத்தால் கூட அது கபடி களமாக மாறிவிடும். பள்ளிகள் முதல் தெருக்கள் வரை என அனைத்து பகுதிகளிலும் கபடி விளையாட்டை காண முடியும் என்பது இந்த கபடிக்கு இந்திய மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமாகும்.
கபடி வங்கதேசத்தின் தேசிய விளையாட்டாக இருந்தாலும் கூட, ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில், கபடிக்கு இன்னமும் இடம் கொடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனினும், 1990-ம் ஆண்டு முதல் ஆசிய போட்டிகளில் கபடி விளையாடப்பட்டு வருவது கபடியின் வளர்ச்சிக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. மேலும், இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ப்ரோ கபடி உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் வகையில் தற்போது அமைந்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது 5-வது ப்ரோ கபடி தொடர். இந்த ஆண்டு புதிதாக 4 அணிகள் இந்த ப்ரோ கபடியில் களம் இறங்குவது கூடுதல் சிறப்பு. மூன்று மாதங்கள் நடைபெறும் இந்த தொடரின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. மேலும், முதல்வாரத்தில் நடைபெறவுள்ள அனைத்து போட்டிகளும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் குப்தா கூறும்போது: ப்ரோ கபடி லீக் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது மற்றும் அதன் தாக்கமும் மக்களிடையே அதிகரித்துள்ளது என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. 12 அணிகள் இந்த ப்ரோ கபடி தொடரில் பங்கேற்கிறது என்பதை பார்க்கும்போது, இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய தொடராக இத்தொடர் விளங்குகிறது.
மூன்று மாதங்கள் நடக்கும், த்ரில் நிறைந்த அனுபவத்தை காண காத்திருக்கிறேன் என்று கூறினார்.
குஜராத் அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள ஒருவர் கூறும்போது: கபடி விளையாடும் பெரும்பாலான வீரர்கள் அதிக உணவு எடுத்துக் கொண்டு விளையாடி பழக்கப்பட்ட சூல்நிலையில் இருந்து வந்தவர்கள். கபடி என்பது கடினமாக விளையாட்டு தான் என்றபோதிலும், அதற்கென தகுந்த டயட்டை பின்பற்ற வேண்டும். எனினும், விளையாட்டு முடிந்த பின்னர் அந்த நாளில் வீரர்கள் தொடர்ந்து திறனுடன் இருக்கும் வகையிலும், வசதியாக இருக்கும் வகையிலும் இருக்க வேண்டும். எனவே தான் அவர்களுக்கு பிடித்த உணவை அவர்களே எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதுதான் தற்போதைய கால கட்டத்தில் டயட் என்பதை வீரர்கள் மத்தியில் புகுத்த்தப்படவில்லை என்பதற்கான காரணம் என்று கூறினார்.
முதல் நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன. இதேபோல, இரண்டாவது போட்டியில் யூ மும்பா அணி புணேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.