புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசனின்(2017) தொடக்க விழா இன்று (ஜூலை 28) தொடங்கியது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் அறிமுகம் ஆகியுள்ளன.
தொடக்க நாளான இன்று தெலுகு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்அரங்கத்தில் இந்தப் போட்டி இரவு எட்டு மணிக்கு தொடங்கியது.
ஆரம்பத்தில் சரிசம புள்ளிகளுடன் இரு அணிகளும் விளையாடின. பின், தெலுகு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ராகுல் சௌத்ரியின் விவேகமான, துடிப்பான ஆட்டத்தால், முதல் பாதியில் 18-11 என்ற கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணி முன்னிலை வகித்தது.
தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் அந்த அணியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இறுதியில் 32-27 என்ற கணக்கில் தெலுகு அணி வெற்றிப் பெற்றது. ராகுல் சௌத்ரி மொத்தமாக 10 புள்ளிகளைக் கைப்பற்றினார். மற்றொரு நட்சத்திர வீரர் நிலேஷ் சாலுன்கே மொத்தம் 14 ரெய்டுகள் சென்று 7 புள்ளிகளை தெலுகு அணிக்காக சேர்த்தார்.
தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் அஜய் தாக்குர் 6 புள்ளிகளும், தமிழக வீரர் கே பிரபஞ்சன் 7 புள்ளிகளும் வென்றனர். மற்றொரு தமிழக வீரர் சி அருண் 4 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இறுதிக் கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி சற்று ஆக்ரோஷமாகவே ஆடியது. இருப்பினும், புள்ளி வித்தியாசம் மிக அதிகமாக இருந்ததால், தெலுகு டைட்டன்ஸ் அணி வெற்றியை வசப்படுத்தியது.
இதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், 33 - 21 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை புனேரி பால்டன் அணி வென்றது.