Today Pro Kabaddi Matches: புரோ கபடி லீக் தொடரின் 7-வது சீசன், ஐதராபாத்தில் இன்று (ஜூலை.20) தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்களான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை, தமிழ் தலைவாஸ், குஜராத் ஃபார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தா, பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.
Pro Kabaddi Season 7 : ஏழாவது சீசனில் புதிய மாற்றம்
கடந்த ஆண்டு 2018ல் நடந்த ஆறாவது சீசனில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோதின. அடுத்து எதிர்பிரிவில் உள்ள அணிகளை ஒரு முறை மோதின. மேலும் எதிர்பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வைல்டு கார்டு சுற்றில் விளையாடின. இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக் ஆட்டத்தில் விளையாடின. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
இந்த ஏழாவது சீசனில், ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். எஞ்சிய 2 அணிகள் எது? என்பது எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.
தெலுகு டைட்டன்ஸ் vs யு மும்பா
வலிமையான ரெய்டர்ஸ் கொண்ட அணியாக தெலுகு டைட்டன்ஸ் விளங்குகிறது. சித்தார்த் சிரிஷ் தேசாய் எனும் அபார ரெய்டரை தெலுகு டைட்டன்ஸ் அணி 1.45 கோடிக்கு வாங்கியுள்ளது. நடப்பு சீசனில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் இவரே.
கடந்த ஆண்டு நடந்த புரோ கபடி தொடரில் தான் இவர் முதன் முதலாக அறிமுகமானார். யு மும்பா அணிக்காக ஆடிய சித்தார்த், தனது முதல் போட்டியிலேயே 'சூப்பர் 10' புள்ளிகள் பெற்று அசத்தினார். அப்போட்டியில் 15 ரெய்டு புள்ளிகளை குவித்து எதிரணியை மிரட்டினார். அதேபோல், கடந்த சீசனில் அதிவேகமாக 50 ரெய்டு புள்ளிகளை கடந்த முதல் வீரராகவும் விளங்கினார். இவரது ரெய்டை பார்த்தால், 'இந்தாளுக்கு தலையை சுற்றிலும் கண்ணு இருக்கும் போல' என்று எண்ணத் தோன்றும். டிஃபண்டர்களின் கண் அசைவை, மூச்சுக் காற்றின் வேகத்தை வைத்தே அவர்களை எளிதில் கணித்து விடுவது இவரது மிகப்பெரிய பலம். மிக ஆபத்தான ரெய்டராக கடந்த சீசனில் அறியப்பட்ட சித்தார்த்த, இம்முறை தனது முதல் அணிக்கு எதிராகவே களமிறங்குகிறார்.
ரெய்டில் சித்தார்த் தேசாய்
டிஃபண்ட்ர்களில் வலது கார்னரில் ஆகாஷ் சௌத்ரியும், இடது கார்னரில் க்ருஷ்ணா மதானியும் பலம் சேர்க்கின்றனர். ஆகாஷ் தத்து, அருண், கேப்டன் அபோசர் மொஹாஜர் ஆகியோரும் சப்போர்ட்டிவ் ரோல்களில் அசத்த காத்திருக்கின்றனர்.
யு மும்பா அணி கேப்டன் ஃபேசல், அதுல், சந்தீப் நார்வால், ரோஹித் பலியான் அபிஷேக் சிங் என கடுமையான டிஃபண்டர்களை கொண்ட அணியாக விளங்குகிறது. அதிலும், 'The Beast' என்று.... அதாவது 'மிருகம்' என்று அழைக்கப்படும் சந்தீப் நார்வால் வலது கார்னரில் நின்றுக் கொண்டு, எதிரணி ரெய்டர்களை களமிறங்கவே அச்சுறுத்த காத்திருக்கிறார்.
ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
பெங்களூரு புல்ஸ் vs பாட்னா பைரேட்ஸ்
இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூரு புல்ஸ் அணியின் மெகா பலம் கேப்டன் ரோஹித் குமார் மற்றும் பவன் ஷெராவத். கடந்த சீசனில், வெறும் 24 போட்டிகளில் 282 ரெய்டு புள்ளிகளை குவித்தவர் பவன். இம்முறையும், தனது கால்கள் மூலம் எதிரணி மண்ணில் ஆதிக்கம் செலுத்தக் காத்திருக்கிறார்.
பாட்னா பைரேட்ஸ் அணியில், கேப்டன் பர்தீப் நார்வால் தான் அங்கு ஆல் இன் ஆல் அழகு ராஜா. 22 வயதே ஆன பர்தீப், கடந்த 5 சீசன்களில் மொத்தமாக் 858 ரெய்டு புள்ளிகள் குவித்து வைத்திருக்கிறார். தவிர ஜாங் குன் லீ, விகாஸ் ஜக்லன், நீரஜ் குமார் ஆகியோர் சப்போர்ட்டிவ் ரோல்களில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டிஃபெண்டிங் சாம்பியனுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.