புரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசனின்(2017) தொடக்க விழா இன்று (ஜூலை 28) தொடங்குகிறது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
கடந்த ஐபிஎல் தொடரின் போது, ஒவ்வொரு அணியும் தனது முதல் போட்டியில் விளையாடுகையில், போட்டி நடைபெறும் இடத்தில் அந்த அணிகளுக்கான தொடக்க விழாக்கள் நடைபெற்றது.
அதேபோல், இந்தாண்டு புரோ கபடி லீக் தொடரிலும், ஒவ்வொரு அணியும் விளாயாடும் இடங்களில் அந்த அணிகளுக்கான தொடக்க விழா அரங்கேறும்.
ஹைதராபாத்தில் இன்று மாலை 6:30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இரவு எட்டு மணிக்கு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் களத்தில் சந்திக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு இதுதான் முதல் தொடராகும். இதனால், தமிழகத்தில் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்கள் ஆவார்கள். கமல்ஹாசன் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஸ்கரன் பயிற்சியாளராக செயல்படுகிறார். அதிகபட்சமாக ரூ.63 லட்சத்துக்கு அமித் ஹூடா ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவருடன் நட்சத்திர வீரரான அஜய் தாக்கூர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருணும் இடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டி குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் அளித்துள்ள பேட்டியில், "தெலுகு டைட்டன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டி கடினமானதுதான். புதிய அணியாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்கின்றனர். பாஸ்கரன் சிறந்த பயிற்சியாளர். உலகக்கோப்பையில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
தமிழகத்தில் கபடிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. மற்ற இடங்களைவிட தமிழகத்தில் கபடியை அதிகமாக நேசிக்கிறார்கள். இதனால், 100 சதவீதம் முழு நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்கிறோம்.
சிறுவயதில் யாரைப் பார்த்து வளர்ந்தோமோ, அவரே எங்கள் அணியின் உரிமையாளராக (சச்சின் டெண்டுல்கர்) இருப்பது பெருமையாக உள்ளது. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம். அணியில் தமிழக வீரர்கள் பலர் இருந்தாலும், அவர்களுடன் மொழி ரீதியிலாக எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில், கபடியே மொழிதான். தமிழக வீரர்களில் விஜின், சி.அருண், பிரதாப், பிரபஞ்சன் ஆகியோர் அணிக்கு வலுச் சேர்க்கிறார்கள். எதிரணி யாராக இருந்தாலும் வெற்றிதான் எங்களுடைய இலக்கு" என்று தெரிவித்துள்ளார்.