இன்னும் சில நாட்களில் ஐபிஎல் எனும் கிரிக்கெட் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், நடைபெற்று வரும் பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில், நேற்று நடந்த கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் பிரிவின் 2ம் ஆட்டம் நடைபெற்றது. லாகூரில் உள்ள கடாஃபி ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இதில் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியில் இருந்து காலாவதியான விக்கெட் கீப்பரும், என்னைப் பொறுத்தவரை ராசியில்லாத அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான கம்ரான் அக்மல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளட்சர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். என்னா அடி! அக்மலிடம் இருந்து... 27 பந்துகளில் 77 ரன்கள். எட்டு சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள். ஸ்டிரைக் ரேட் 285.19.
அவர் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்ற போது, பெவிலியனில் வரவேற்ற கேப்டன் சமி, 'நீ தேவைப்பட்டதற்கும் மேல் செய்துவிட்டாய். இதுவே போதும் நண்பா!' என்கிற ரீதியில் அக்மலை ஆசுவாசப்படுத்தினார். மழை காரணமாக 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டதால், பெஷாவர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.
அடுத்து இலக்கை நோக்கி களமிறங்கியது முகமது ஆமிர் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி. தொடக்க வீரர் முக்தார் அகமது 1 ரன்னில் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க வீரர் ஜோ டென்லி மற்றும் 'பாகிஸ்தான் ஹீரோ' பாபர் அசம் நங்கூரம் போட்டு அணியை வழிநடத்திச் சென்றனர்.
இருவரும் நன்றாக ஆடினர்.. சிறப்பாக ஆடினர், அற்புதமாக ஆடினர். ஆனால், வெற்றிப் பெற ஆடினார்களா? என்பதே நமது கேள்வி.
அதாவது 11 ஓவர்கள் முடிவில், அந்த அணியின் ஸ்கோர் 99-1. வெற்றி பெற 30 பந்துகளில் 72 ரன்கள் தேவை. பந்துக்கும், ரன்னுக்கும் உள்ள இடைவேளை 42 ரன்கள். மிக சவாலான இலக்கு தான். ஆனால், செட் பேட்ஸ்மேன்கள் இருவரும் களத்தில் உள்ளனர். ஒரேயொரு விக்கெட் மட்டும் தான் விழுந்துள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. பவுலர்களை விடுங்கள்... இன்னும் 4 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் கையில் உள்ளனர். அப்படியெனில், இவர்கள் எப்படி அடித்திருக்க வேண்டும்? ஆனால்,
13-வது ஓவரில் 11 ரன்கள்
14-வது ஓவரில் 7 ரன்கள்...
... தான் எடுத்தனர் இவ்விருவரும். இவர்களால் ஏன் அடிக்க முடியவில்லை? என்பது அடுத்தக் கட்ட பிரச்சனை. ஆனால், குறைந்தபட்சம், தன்னால் அடிக்க முடியவில்லை என்றால், அவுட்டாகி சென்றிருக்கலாம். அதையும் செய்யாமல், என்னமோ இன்னும் 10 ஓவர்கள் மீதமுள்ளது போல இருந்தது அவர்களின் மேனரிசம். குறிப்பாக, பாபர் அசம். இவர் தனக்கு ஏதுவாக வரும் பந்துக்காக காத்திருந்தது தான் உச்சக்கட்ட கொடுமை.
ஒவ்வொரு பந்தை விடும் போதும், தேவைப்படும் ரன் ரேட் எகிறிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் மிட்-ஆஃபில் ஸ்டைலாக பவுண்டரி அடிப்பதில் ஆர்வம் காட்டியதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒன்று, அடித்திருக்க வேண்டும். அல்லது அடிக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லையெனில், அவுட்டாவது ஆகி இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல், 13 மற்றும் 14வது ஓவரை இருவரும் விளையாடிய விதம் நமக்கு 'பல கேள்விகள்' மனதில் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை?
இத்தனைக்கும் ஒன்றும் மாயாஜால பந்துவீச்சு கூட கிடையாது. பெரும்பாலான பந்துகள் ஸ்லோவாக தான் வீசப்பட்டன.
இறுதியில் 2 பேட்ஸ்மேன்களை மட்டும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது கராச்சி கிங்ஸ் அணி. வாய்ப்பு கிடைக்காத 3 பேட்ஸ்மேன்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தது தான் கொடுமை.
பாபர் அசம் 45 பந்தில் 63 ரன்களும். ஜோ டென்லி 46 பந்தில் 79 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டி வரும் 25ம் தேதி நடக்கிறது. இதில், இஸ்லாமாபாத் யுனைட்டட் அணியும், பெஷாவர் சல்மி அணியும் மோதுகின்றன.
இப்படி சுருக்கமாகவும் சொல்லலாம்... பிஎஸ்எல்-ன் முதலாம் ஆண்டு சாம்பியனும், இரண்டாம் ஆண்டு சாம்பியனும் 2018-ன் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன என்று!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.