ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த பிப்.14ம் தேதி மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன், சுப்ரமணியன் ஆகிய இரு வீரர்களும் இந்த தாக்குதலில் பலியானார்கள். இவர்களது உடல், நேற்று அவர்களின் சொந்த ஊரில், ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பி வந்த டி-ஸ்போர்ட் சேனல், அதன் ஒளிபரப்பை ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் போல, அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் டி20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதனை, இந்தியாவில் பிரபல சேனலான டிஸ்கவரி சேனலின் டி-ஸ்போர்ட் சார்பில் ஒளிபரப்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட அன்று தான் இந்த டி20 லீக்கும் தொடங்கியது. இந்நிலையில், டி-ஸ்போர்ட் அதன் ஒளிபரப்பை தற்போது நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒளிபரப்பு நிறுவனத்திடம் ஐஇதமிழ் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நேற்றுமுன்தினம் (பிப்.15) அன்று இரு போட்டிகள் நடைபெற்றது. அதில், முதல் போட்டியின் போது, எந்த தடங்களும் இல்லை. இரண்டாவது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, 'கமர்ஷியல் விளம்பரங்களை போட்டியின் இடையே ஒளிபரப்ப வேண்டாம்' என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை (பிப்.16) இத்தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
முழு தொடர் ஒளிபரப்பும் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், தற்காலிகமாக தொடர் ரத்து செய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தனர்.