புனேவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இந்த பவுலிங் கூட்டணியை வைத்துக் கொண்டு 300 ரன்கள் அடித்தாலும், எதிரணி திருப்பி அடித்துவிடும் என்பதை இப்போதாவது கேப்டன் ஸ்மித் புரிந்திருப்பார் என நம்புவோம்.
மந்தமான ரஹானே பேட்டிங்:
டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், புனேவை பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், த்ரிபாதியும் களமிறங்கினர். பவர்பிளேயில் சிறப்பான ஒரு ஆட்டத்தை த்ரிபாதி வெளிப்படுத்தினார். அவர் கொடுத்த எளிதான ஒரு கேட்சை யூசுஃப் பதான் வீணடித்தாலும், என் பங்குக்கு இந்த ஸ்கோர் என்று மரியாதையாக சொல்லும் அளவிற்கு 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்துவிட்டுச் சென்றார். ஆனால், மறுமுனையில், நின்றுக் கொண்டிருந்த ரஹானே தான் பெரும் பிரச்னையாக இருந்தார். அவரால் இன்னும் ஒரு வலிமையான ஷார்ட்களை கூட ஆட முடியவில்லை. சரி... பவர்ஹிட்கள் அடிக்க முடியவில்லை என்றாலும், கேப் பார்த்து பவுண்டரிகளை தட்டவும் அவரால் முடியவில்லை. (இது டி20 பாஸ்... ) மிகவும் பொறுமையாக ஆடிய ரஹானே, 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து நரைன் பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
மோசமான ஃபீல்டிங்!
எப்படியும் 7 - 8 ரன்கள் ஓவர்த்ரோ மூலமாகவே புனேவிற்கு நேற்று கிடைத்திருக்கும். அந்தளவிற்கு கொல்கத்தாவின் ஃபீல்டிங் இருந்தது. இந்த சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புனே, ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரன்களை சேர்த்தது.
பென் ஸ்டோக்ஸ் நீக்கம்....தோனியின் அதகள ஆரம்பம்!
காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் விளையாடாததால், அவருக்கு பதிலாக டு பிளசிஸ் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் - தோனி ஜோடி, அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. எப்போதும் பொறுமையாக இன்னிங்ஸை ஆரம்பிக்கும் தோனி, நேற்று தனக்கு வாகாக பந்து வருவதை உணர்ந்து, ஆரம்பத்திலேயே அடிக்க ஆரம்பித்துவிட்டார்.
லெக்-பிரேக் பவுலரான பியூஷ் சாவ்லாவின் ஒரே ஓவரில் பவுண்டரி, மேலேறி வந்து சிக்ஸ் என்று தனது ரசிகர்களை ஏகோபித்தமாக குஷிப்படுத்தினார். குல்தீப் யாதவ் ஓவரில் மற்றொரு சிக்ஸரை லெக்சைடில் பறக்கவிட்ட தோனி, அவரது ஓவரிலேயே வைட் ஆஃப் லெந்த் பந்தை தவறாக கணித்து, இறங்கி வந்து ஆடிய போது ஸ்டெம்பிங் செய்யப்பட்டு அவுட்டானார்.
என்னாச்சு ஸ்மித்..? வாவ் கிறிஸ்டியன்....
மறுமுனையில் இருந்த கேப்டன் ஸ்மித், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், ஸ்லோ மோஷனிலேயே ஆடிக் கொண்டிருக்க, 20 ஓவர்கள் முடிவில் 180+ ஆக இருக்க வேண்டிய புனேவின் ஸ்கோர், 18 ஓவரில் 150+ எனும் ரேஞ்சிலேயே இருந்தது. என்னடா இது...னு ரசிகர்கள் டென்ஷன் ஆகிக் கொண்டிருக்க, 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸரை விளாசி நம்பிக்கை ஏற்படுத்தினார் டேன் கிறிஸ்டியன். பின் ஒருவழியாக ஸ்மித் கடைசி ஓவரில் ஒரேயொரு சிக்ஸ் மட்டும் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் புனே 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
ஸ்டைல் ரன்அவுட் செய்த 'தல' தோனி ....
சற்று கடினமான இலக்கை துரத்த ஆரம்பித்த கொல்கத்தா அணியில், 'ஆச்சர்ய' தொடக்க வீரரான சுனில் நரைன், 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது தோனியால் கேஷுவலாக ரன்அவுட் செய்யப்பட்டார்.
ஃபீல்டர் தாகூர் த்ரோ செய்த பந்தை, ஸ்டைலாக திரும்பி நின்றுக் கொண்டு, வந்த பந்தை வாங்கி அடிக்காமல், அப்படியே தட்டிவிட்டு ரன்அவுட் செய்தார் தோனி. (வயசானாலும் உன் ஸ்டைல் இன்னும் மாறல..) என்று தான் நமக்கு சொல்லத் தோன்றியது. ஆனால், அதற்கு பின் தான் புனேவிற்கு கண்டம் ஆரம்பித்தது.
மிரட்டிய உத்தப்பா.....
நரைனைத் தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா தான், ஆட்டத்தை அடுத்த சில மணி நேரங்களிலேயே தங்களது அணி பக்கம் முற்றிலுமாக மாற்றிவிட்டார். அவர் 12 ரன்கள் எடுத்திருக்கையில், இம்ரான் தாஹிர் வீசிய பந்தை தூக்கி அடித்த போது, சிக்ஸ் லைனில் நின்றுக் கொண்டிருந்த உனட்கட் கோட்டைவிட, அங்கே தான் 'ஆப்பு' புனே சைட் திரும்பியது. அதற்கு பின், வாஷிங்டன் சுந்தர் வீசிய ஓவரில் 2 சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்ட உத்தப்பா, எந்த பவுலரையும் விட்டுவைக்கவில்லை. பந்திருக்கும் இலக்கிற்கும் 50 ரன்கள் வித்தியாசம் இருந்த நிலையில், சற்று நேரத்தில் இரண்டையும் சமம் செய்து விட்டார்.
மற்றொரு புறம் கேப்டன் கம்பீர் பக்காவாக பார்ட்னர்ஷிப் கொடுக்க, புனே அணியை கபளீகரம் செய்தது கொல்கத்தா. இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 158-ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். இதுதான் ஐபிஎல்-ல் கொல்கத்தா அணியின் 2-வது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும்.
முடிவில், 12 ரன்னில் கொடுத்த கேட்சை புனே தவறவிட, உத்தப்பா 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். 32 ரன்னில் கொடுத்த கேட்சை தவறவிட, கம்பீர் 62 ரன்கள் குவித்தார். இதையடுத்து, 18.1-வது ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து கொல்கத்தா சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இதனால் 12 புள்ளிகளுடன், மும்பையை பின்னுக்குத் தள்ளி கொல்கத்தா முதல் இடத்திற்கு முன்னேறியது. புனே 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.