கொல்கத்தாவிற்கு எதிரான இன்றைய போட்டியில் வென்றதன் மூலம், பிளேஆஃப் சுற்று வாய்ப்பை கிங்ஸ் XI பஞ்சாப் தக்கவைத்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மேக்ஸ்வெல், 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். சாஹா 33 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகமாக அரைசதம் (15 பந்துகள்) அடித்து, கடந்த போட்டியில் ரசிகர்களை குஷிப்படுத்திய சுனில் நரேன் 18 ரன்னிலும், கேப்டன் கம்பீர் 8 ரன்னிலும் வெளியேறினார்கள். காயத்திலிருந்து மீண்டுவந்த உத்தப்பா முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இத்தொடரின் பல போட்டியில் உத்தப்பாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா வென்றது குறிப்பிடத்தக்கது. கம்பீர் மற்றும் உத்தப்பா ஆகிய இருவரையும், 24 வயதே ஆன புதுமுக லெக் பிரேக் ஸ்பின்னர் ராகுல் டெவாடியா காலி செய்தார்.
ஆனால், எதற்கும் அஞ்சாத மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ் லின், 52 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ஆனால், பின்வரிசை வீரர்களான யூசுப் பதான் மணீஷ் பாண்டே, கிராண்ட்ஹோம் ஆகியோர் எந்தவித போராட்டமும் இன்று சரண்டர் ஆனார்கள். அவசர அவசரமாக சிக்ஸர் அடித்து மேட்சை முடிக்க வேண்டும் என சொல்லி அனுப்பி இருப்பாங்க போல… அனைவரும் தூக்கி அடித்து சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்கள். இதனால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இன்று தனது 12-வது போட்டியில் ஆடிய பஞ்சாப் அணி, 6-வது வெற்றியைப் பதிவு செய்து, 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இன்னும் இரு ஆட்டங்கள் மட்டுமே அந்த அணிக்கு மீதமுள்ளது. அந்த இரண்டிலும் கட்டாயம் பஞ்சாப் வெல்ல வேண்டும். அப்படி வெற்றிப் பெறும் பட்சத்தில், பஞ்சாபிற்கு 16 புள்ளிகள் கிடைக்கும். அதேசமயம், 15 புள்ளிகள் கொண்டுள்ள ஹைதராபாத் அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. அதில், ஹைதராபாத் தோற்றுவிட்டால், பஞ்சாப் பிளேஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக உள்நுழைந்துவிடும்.
அதற்கு ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.