35 நிமிடங்களில் கதை முடிந்தது! கணக்கை தீர்த்துக் கொண்ட பி.வி.சிந்து

ஆண்களுக்கானா ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, 18-21, 6-21 என்ற  நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமோட்டாவிடம் 35 நிமிடங்களில் வீழ்ந்தார்

பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தார்.

‘டெத் ஆஃப் குரூப்’ என அழைக்கப்படும் இந்த பிரிவில் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் ஸூ யிங், 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சி, அமெரிக்காவின் பெய்வென் ஹெங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறுவார்கள்.

தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் சிந்து, இன்று தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இருவரும் இதற்கு முன்னர் 13 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் சிந்து 9 வெற்றிகளை பெற்றுள்ளார். எனினும் இந்த ஆண்டில் யமகுச்சியுடன் மோதிய 5 ஆட்டங்களில் சிந்து 4-ல் தோல்வி கண்டுள்ளார்.

இதனால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தொடங்கியது. முதல் சுற்றில், இரு வீராங்கனைகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். புள்ளிகள் மாறி மாறி கிடைக்க, பரபரப்பாக சென்ற அந்த சுற்றில் 24-22 என்று சிந்து வென்றார்.

டாப் வீராங்கனைகளுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் முதல் செட்டை வென்றால், இரண்டாவது தோற்பதை வழக்கமாக கொண்டிருக்கும் சிந்து, இம்முறை உஷாராக விளையாடினார். 2வது செட்டில் 21-15 என வென்று ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

அதேசமயம், ஆண்களுக்கானா ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, 18-21, 6-21 என்ற செட் கணக்கில்  நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமோட்டாவிடம் 35 நிமிடங்களில் வீழ்ந்தார். அதிலும், இரண்டாவது செட்டில் வெறும் 6 புள்ளிகள் மற்றும் எடுத்து சரண்டரானார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close