மிரண்டு போய் நின்ற உலகின் No.1 வீராங்கனை! பி.வி.சிந்து மிரட்டல் வெற்றி

புள்ளியை வென்றாலும், சிந்துவின் அபார ஆட்டத்தால் நிதானத்தை இழந்தார் Tai Tzu

By: Published: December 13, 2018, 7:54:56 PM

உலகின் நம்பர்.1 பேட்மிண்டன் வீராங்கனையின் பதட்டத்தை சாமர்த்தியமாக பயன்படுத்தி, அவரை தவறு செய்ய வைத்து, உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார் பி.வி.சிந்து.

பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நேற்று தொடங்கியது.

இதில், பி.வி.சிந்து ‘டெத் ஆஃப் குரூப்’ என அழைக்கப்படும் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்தார். இதில், முதல் நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் ஸூ யிங், 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சி, அமெரிக்காவின் பெய்வென் ஹெங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறுவார்கள்.

தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் சிந்து, நேற்று தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில், 24-22, 21-15 என்ற செட் கணக்கில் சிந்து வென்றார்.

இந்த நிலையில், இன்று நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் Tai Tzu Ying-கை சிந்து எதிர்கொண்டார். முதல் செட்டில் தன்னுடைய அபாரமான Drop Shots மூலம் சிந்துவை திணறடித்தார் Tai Tzu, 14-21 என அந்த செட்டை கைப்பற்றினார். சிந்து சற்று நிலைகுலைந்து தான் போனார்.

இதன்பின், பயிற்சியாளர் கோபிச்சந்திடம் சில ஆலோசனைகளைப் பெற்றார் சிந்து. அது நன்றாக ஒர்க் அவுட்டும் ஆனது. இரண்டாவது செட்டில், ஆரம்பம் முதலே புள்ளிகளை அதிகம் திரட்டி முன்னிலை வகித்தார். Tai Tzu விடாமல் விரட்டினாலும், முன்னிலையை விடாமல் ஆடிய சிந்து, அந்த செட்டை 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியாக, Decider சுற்று தொடங்கியது. மிக அனாயசமாகவும், துரிதமாகவும் இந்த செட்டை தொடங்கி முன்னிலை வகித்தார் Tai Tzu. ஆனால், விட்டுக் கொடுக்க விரும்பாத சிந்து மிகக் கடுமையாக போராடினார். அபாரமாக ஆடிய சிந்து 20-16 என்று முன்னிலை பெற்று ஆச்சர்யப்படுத்தினார்.

இதன்பின், ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வகையில் ஆட்டம் அமைந்தது. Tai அடித்த ஷாட் ஒன்றை சிந்து Base Line-ன் பார்டரில் நின்று அடிக்க நினைத்து, பிறகு அதனை தவிர்த்தார். இறகு வெளியே விழுந்ததாக சிந்து நினைத்தார். ஆனால், ரீபிளேயில் பார்டரில் இறகு முத்தமிட்டது தெரியவர, இழுத்து வைத்திருந்த மூச்சை இறக்கி வைத்தார் Tai.

புள்ளியை வென்றாலும், சிந்துவின் அபார ஆட்டத்தால் நிதானத்தை இழந்தார் Tai Tzu. இந்த பதட்டத்தை பயன்படுத்திக் கொண்ட சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையை தவறு செய்ய வைத்து, 21-18 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.

இருவரும் இதற்கு முன்பு 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இப்போது தான் முதன்முறையாக, சிந்து வெற்றிப் பெற்றிருக்கிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pv sindhu beats top ranked tai tzu ying in world tour finals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X