கொரியா ஒபன் சூப்பர் சீரியஸ் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் திரிலிங் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
கொரியா ஓபன் சூப்பர் சிரீஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கால்இறுதிக்கு முன்னேறிய தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை மினட்சு மிடானியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஜப்பானின் மிடானியை 21-19, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அதில், சீனாவை சேர்ந்த ஹி பிங்ஜியாவை, பி.வி.சிந்து எதிர்கொண்டார். முதல் செட்டில் சிந்துவும், இரண்டாவது செட்டில் சீன வீராங்கனையும் வென்றனர். சிந்துவுக்கு கடும் சவாலாக விளங்கிய சீன வீராங்கனையை, 3-வது செட்டில் அதிரடியாக விளையாடி 21-16 என்ற கணக்கில் சிந்து வீழ்த்தினார். 66 நிமிடங்களில் 21-10,17-21,21-16 என்ற செட் கணக்கில் சீன விராங்கனை ஹி பிங்ஜியாவை, பி.வி.சிந்து வீழ்த்தினார்.
இதன் மூலம் கொரியா ஒபன் சூப்பர் சீரியஸ் பாட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார். இறுதி போட்டியில், ஜப்பானின் நோசாமி ஒகுஹராவை சிந்து எதிர்கொள்ளவுள்ளார்.