சீனாவின் குவாங்ஸோ நகரில் நடந்த உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் பட்டம் வெல்பவர்கள் 'உலக சாம்பியன்' என அழைக்கப்படுவார்கள். மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கடந்த ஆண்டைப் போல் இந்த முறையும் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவும் மோதினார்கள்.
முதல் சுற்றில், ஒகுஹாரா தொடக்கத்திலேயே சில தவறுகள் செய்ய, சிந்து லீடிங்கில் இருந்தார். 7-3 என்ற முன்னிலையில் இருந்த போது சுதாரித்துக் கொண்ட ஒகுஹாரா 5-7 என அடுத்தடுத்து புள்ளிகளை வென்றார். இருப்பினும், சிந்துவும் ஆக்ரோஷம் காட்ட, 11-6, 14-6 என பெரும் முன்னிலை பெற்றார்.
ஆனால், அதன்பின் மாஸ் காட்டிய ஒகுஹாரா புள்ளிகளை குவிக்கத் தொடங்கினார். ஒருக்கட்டத்தில் 16-16 என இருவரும் சமநிலையில் இருந்தனர்.
பிறகு, ஒகுஹாரா செய்த சில தவறுகளை பயன்படுத்திக் கொண்ட சிந்து, சில அதிரடி ஷாட்கள் மூலமும், துல்லியமாக கணித்த Drop Shots மூலமும் மீண்டும் முன்னிலை பெற்று முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் வென்றார்.
அடுத்து, இரண்டாவது செட்டில் 11-9, 12-13, 16-17 என்று எட்ஜ் ஆஃப் தி சீட்டில் முன்னிலையில் பயணித்த சிந்து, இறுதியில் 21-17 என்ற கணக்கில் வென்று ஒகுஹாராவை வீழ்த்தினார்.
இந்த தொடர் முழுவதுமே, உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த சிந்து, உலகின் நம்பர்.1 வீராங்கனை, முன்னாள் உலக சாம்பியன் என அனைத்து வீராங்கனைகளையும் கபளீகரம் செய்து, இன்று இறுதிப் போட்டியிலும் வென்று உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் இதே ஜப்பான் வீராங்கனையான நஜோமி ஒகுஹாராவிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார்.
உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.