பயிற்சியாளராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு டிராவிட் தொடர்வார்: பிசிசிஐ

இந்தியா ‘ஏ’ அணி, 19-வயதிற்குட்பட்டோர் அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்வார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் போட்டியில் கருண்நாயரின் தலைமையிலும், ஒருநாள் போட்டியில் மணிஷ் பாண்டேவின் தலைமையிலும் இந்திய ‘ஏ’ அணி விளையாடவுள்ளது. ஜூலை 26-ம் தேதி, இந்திய ‘ஏ’ அணி தென் ஆப்ரிக்காவுடனும், அதேநேரத்தில் ஜூலையிலேயே, 19-வயதிற்குட்பட்டோர் இந்திய அணி, இங்கிலாந்திலும் விளையாடவுள்ளது. இந்நிலையில், டிராவிட் எந்த அணியுடன் செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயி்ற்சியாளரும், ஆலோசகருமான இருந்துவந்த டிராவிட் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளதை டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது. டிராவிட் இந்திய ‘ஏ’ அணிக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரண்டு வருடங்களாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசனையாளராக டிராவிட் இருந்துவந்தது பெறுமையளிக்கிறது. ஆனால், இந்திய ‘ஏ’ அணி மீது கவனம் செலுத்துவதற்காக டிராவிட் செல்கிறார். எனினும், டிராவிட் டெல்லி டேர்டெவிஸ்ல்ஸ் அணியில் இருந்து விலகிச் செல்வது வருத்தம் அளிக்கிறது. அவரிடம் இருந்து கிரிக்கெட் குறித்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படாத நிலையில், டிராவிட்டின் பதவி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

×Close
×Close