இந்தியா vs நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் கிரீன்ஃபீல்டு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் புதிதாக உருவாக்கப்பட்டதாகும். இதில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி அரங்கேற இருக்கிறது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்தும் வென்று 1-1 என சமநிலையில் உள்ளன. இதனால், இன்றைய இறுதிப் போட்டியில் எப்படியாவது தொடரை வென்றுவிட வேண்டும் என இந்திய அணி உள்ளது. அதேசமயம், உலகின் நம்பர்.1 டி20 அணியான நியூசிலாந்தும், தொடரை இழந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது.
பெரிதாக ஃபுட்வொர்க் இல்லாமல், ஏதுவான பந்துகளை மட்டும் சிக்சருக்கு தூக்கி, நானும் 'அதிரடி வீரன்' தான் என நினைத்துக் கொண்டிருக்கும் ரோஹித் ஷர்மா, முதலில் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரது மேனரிசமே மந்தமாக இருப்பது போல தான் தோன்றும் என்றாலும், ஃபுட்வொர்க் இல்லாமல் டி20-ல் ஒன்னும் செய்ய முடியாது என்பதை அவர் உணர வேண்டும்.
தவானை பொறுத்தவரை பிரச்சனையில்லை. ஆனால், இன்னும் ஆட்டத்தில் கவனம் தேவை. தோனியின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது (சஞ்சு சாம்சனை பற்றி யோசிங்கப்பா!). ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர்கள் அடிக்க நினைப்பதற்கு முன், பந்துகளை சரியாக தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயரை விட எவ்வளவோ சிறந்த வீரர்கள் வெளியில் இடம் கிடைக்காமல் இருக்கின்றனர். இருப்பினும், ஐயருக்கு இன்னும் சில வாய்ப்புகள் தரலாம்.
கோலி, 6 பேட்ஸ்மேன் 5 பவுலர்கள் முறையை இப்போட்டியில் மாற்றிக் கொண்டால் நல்லது. குறிப்பாக, அக்ஷர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை மீண்டும் அணியில் சேர்க்கலாம்.
இன்றைய இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெறுவதற்கு இவையனைத்தையும் செய்ய வேண்டும் என சொல்லவில்லை, ஆனால் கோலி நிச்சயம் நிறைய விஷயங்கள் பற்றி பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, தோனி மற்றும் ஹர்திக் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பதில் கோலி சற்று பின் வாங்க வேண்டும். இளம் விக்கெட் கீப்பரை விரைவில் கண்டறிவது மிக மிக அவசியம்.
நியூசிலாந்தை பொறுத்தவரை, அணி ஸ்டிராங்காக இருக்கிறதோ இல்லையோ, அவர்களது கான்ஃபிடன்ட் லெவல் மிகவும் ஸ்டிராங்காக உள்ளது. அதனால் தான் இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்குகின்றனர்.
நியூசிலாந்து அணி நிர்வாகத்தின் எண்ண ஓட்டங்களை சரியாக கணித்த ஐஇதமிழ், இரண்டாவது டி20 போட்டியில், 'இந்தியா எப்படி தோற்கப் போகிறது?' என்பதை துல்லியமாக முன்கூட்டியே சொன்னது. அதன்படியே எல்லாம் நடந்தது.
இந்த நிலையில், கேரள மாநிலம் முழுவதும் தற்போது மழை கடுமையாக பெய்து வருகிறது. இன்றைய போட்டி நடைபெறும் திருவனந்தபுரத்திலும் மழை பெய்கிறது. மாலை வரை தொடர்ந்து மழை பெய்தால், ஆட்டம் தடைபடும் அபாயம் உள்ளது. இதனால், இந்திய அணி கோப்பையை வெல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.