பிசிசிஐ நிர்வாகி ராமச்சந்திரா குஹா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பதவி விலகியதற்கான காரணங்களை பட்டியலிட்டு, தற்போது அவர் பிசிசிஐ சேர்மேன் வினோத் ராய்-க்கு, கடிதமாக அனுப்பியுள்ளார். அதில்,
1. தேசிய பயிற்சியாளர்கள் ஐபிஎல்லிற்காக தேசிய அணிகளை புறக்கணிக்கின்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய ஏ மற்றும் இந்திய ஜுனியர் அணிக்கும் பயிற்சியாளராக உள்ளார்.
2. பிசிசிஐ ஒப்பந்த வர்ணனையாளர் சுனில்கவாஸ்கர், வீரர்கள் மேலாண்மை நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
3. டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத தோனிக்கு 'ஏ' கிரேடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
4. இந்திய கோச் பிரச்சனையை கையாள்வதில் முதிர்ச்சி தன்மை இல்லை. பயிற்சியாளராக சிறப்பான சாதனைகளை தன்னகத்தே வைத்திருக்கும் கும்ப்ளேவின் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.
5. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ முற்றிலும் புறந்தள்ளுகிறது. தேசிய அணி வீரர்களுக்கான சம்பளத்துடன் ஒப்பிடும் போது, உள்ளூர் அணி வீரர்களின் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது.
6. பிசிசிஐயிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள், பிசிசிஐ கூட்டங்களில் கலந்து கொள்வதை நிர்வாகக் குழு எதிர்க்கவில்லை. மவுனமாகவே இருக்கிறார்கள்.
7. நிர்வாகக் குழுவில் ஆண் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதில்லை. ஜவகல் ஸ்ரீநாத்தை கமிட்டியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என கூறுகின்றனர்.
இத்தனை புகார்களை அளித்திருக்கும் குஹா, உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட பிசிசிஐ ஆட்சிமன்ற நான்கு நிர்வாகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.