ச. மார்ட்டின் ஜெயராஜ் – ராமநாதபுரம் மாவட்டம்
Ramanathapuram, 1st Hockey India Junior Men and women south zone Championship 2023 Tamil News: முதலாவது தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வேலு மாணிக்கம் ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் வருகிற 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் கர்நாடக, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் அணிகள் களமாட உள்ளன.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை ‘ஹாக்கி இந்தியா’ அமைப்பு சார்பாக ‘ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் தயார் செய்துள்ளனர். இதற்கான தொடக்க விழா இன்று (சனிக்கிழமை – 18ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

இது தொடர்பாக ‘ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு’ அமைப்பின் தலைவர் செந்தில் குமார் நம்மிடம் பேசுகையில், “தென்னிந்திய ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், காலையில் மகளிருக்கான போட்டியும், நண்பகல் முதல் மாலை வரை ஆடவருக்கான போட்டியும் நடக்கும். ஒவ்வொரு நாளும் 6 போட்டிகள் நடக்க உள்ளன. இத்தொடருக்கான இறுதிப்போட்டி வரும் 26ம் தேதி நடைபெறும்.

இப்போட்டியானது இந்தியா முழுதும் 4 மண்டலங்களாக (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) பிரிக்கப்பட்டு நடக்கிறது. அந்த வகையில், தென்னிந்திய அளவிலான போட்டிகள் ராமநாதபுரத்தில் நடைபெறுகின்றான. இப்போட்டியை நேரில் காண ‘ஹாக்கி இந்தியா’-வின் தேர்வுக்குழு வருகை தருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு அணியில் இருந்தும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, ‘தென்னிந்திய ஹாக்கி’ அணியை உருவாக்குவார்கள். இதேபோன்று மற்ற 3 மண்டல அணிகளும் தேர்வு செய்யப்படும்.

இந்த அணிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு, 4 மண்டல அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கும். இதிலிருந்து சிறந்த வீரர்களை அவர்கள் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்பட்ட ஜூனியர் வீரர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும். பின்னர் அந்த வீரர்கள் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்களில் விளையாடுவார்கள். இதன் மூலம் ஒரு வலுவான ஜூனியர் ஹாக்கி அணியை உருவாக்க ஹாக்கி இந்தியா முடிவு செய்துள்ளது. இத்தொடரில் சிறப்பாக விளையாடும் தமிழக வீரர்களுக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பும் கிடைக்கும்.” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil