ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணியில் சேர்க்கப்படாத ரவீந்திர ஜடேஜா, இன்று நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜாவும், அஷ்வினும் இடம் பிடித்தனர். அதில் அவர்கள் சிறப்பாகவும் விளையாடினர். குறிப்பாக,பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஆனால், அதற்கு பின் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஜடேஜாவுக்கும், அஷ்வினுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
தொடர்ந்து, நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் மீண்டும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
அடுத்து நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடரிலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை. பெங்களூருவில் நடைபெற்ற யோ-யோ ஃபிட்னஸ் ஸ்ட்டில் இருவரும் நல்ல புள்ளிகள் பெற்றுள்ளனர். இதனால், இங்கிலாந்து தொடரில் நிச்சயம் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என இருவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று(அக்.14) தேர்வுக் குழு வெளியிட்ட வீரர்கள் பட்டியலில் இவர்களது பெயர் இடம்பெறவில்லை.
இந்தநிலையில், சவுராஷ்டிரா அணிக்கும், ஜம்மு காஷ்மீர் அணிக்கும் இடையே நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, சவுராஷ்டிரா வீரர் ரவீந்திர ஜடேஜா இரட்டை சதம் அடித்துள்ளார். 313 பந்துகளை சந்தித்த ஜடேஜா, 201 ரன்கள் குவித்தார். இதில் 23 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில், வசீம் ராஸா பந்துவீச்சில் அவர் அவுட்டானார். இதனால், சவுராஷ்டிரா அணி தனது முதல் இன்னிங்ஸில் 624 ரன்கள் குவித்தது.
அடுத்த நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி உருவாக்கமாக இருந்தாலும், ஹர்திக் பாண்ட்யா வருகைக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஜடேஜாவும், அஷ்வினும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் இவர்களது பங்களிப்பு இன்றி இந்திய அணி உடனடியாக வெற்றிகளை குவிப்பது கடினமே. இதனால், டெஸ்ட் தொடர்களில் இவர்களுக்கு தேர்வுக்குழு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.