ANBARASAN GNANAMANI
ரஷித் கான் அர்மான்... வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணியில் மிக வேகமாக வளர்ந்து வரும் வீரர் ரஷித் கான். வெறும் 19 வயதே ஆன ரஷித், இன்று சத்தமே போடாமல் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். ஐபிஎல்-லில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் ரஷித் நமக்கு அறிமுகம் என்றிருந்தாலும், இவர் தற்போது சர்வதேச அரங்கில் செய்து கொண்டிருக்கும் கபளீகரத்தை யாரும் அறிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.
நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் ரஷித் கான் மொத்தம் 16 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார்.
லெக் பிரேக் கூக்ளி பவுலரான ரஷித் கான் பந்துவீச வந்தாலே, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் 'அய்யயோ' மோடுக்கு செல்லும் அளவிற்கு படாதபாடு படுத்திவிட்டார் மனுஷன். 16 விக்கெட்டுகள் எடுப்பது பெரிய விஷயமல்ல... இத்தொடரில் இவரது ஆவரேஜ் எவ்வளவு தெரியுமா? வெறும் 7.93. எகானமி எவ்வளவு தெரியுமா? 3.22. இப்போது புரிகிறதா ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் ஏன் இவர் பந்துவீச வந்தால் பதறினார்கள் என்று!?.
விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்மாக இருக்கிறது. அதேபோல், எந்த விக்கெட்டாக இருந்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் 'தகவமைத்துக் கொள்ளுதல்' என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி... தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செய்துக் கொண்டிருப்பவர் டி வில்லியர்ஸ் எனலாம். இந்திய கேப்டன் விராட் கோலியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்.
ஆனால், 19 வயதே ஆன ரஷித் கான் இதனை அற்புதமாக செய்வது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்ல.. அடிலைட் ஸ்டிரைகர்ஸ், கொமில்லா விக்டோரியன்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், காபுல் ஈகிள்ஸ், சைன்ரைஸ்ர்ஸ் ஹைதராபாத் என்று உலகம் சுற்றும் வாலிபனாக மிக பிசியாக, அதே சமயம் வெற்றிகரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் ரஷித். செல்லும் அனைத்து இடங்களிலும் தனது விக்கெட் பசியை தீர்த்துக் கொள்கிறார்.
2018 புத்தாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் மட்டுமே முடிவடைய உள்ள சூழலில், இந்தாண்டு இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் ரஷித். ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் (ஜிம்பாப்வேவுக்கு எதிராக) 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் குல்தீப் யாதவ் முதல் இடத்தில் உள்ளார். யுவேந்திர சாஹல் 6 போட்டிகளில் 16 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
குல்தீப் மற்றும் சாஹலின் ஆவரேஜ் முறையே 13.88, 16.37 ஆக உள்ளது. ஆனால், ரஷீத்தின் ஆவரேஜ் 7.93. குல்தீப் மற்றும் சாஹலின் எகானமி 4.62, 5.02. ஆனால், ரஷீத்தின் எகானமி 3.22. குறிப்பாக, குல்தீப் 51 ஓவர்களும், சாஹல் 52.1 ஓவர்களும் வீசியுள்ளனர். ஆனால், ரஷித் 39.2 ஓவர்களே வீசி இந்த விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
குல்தீப் 236 ரன்களும், சாஹல் 262 ரன்களும் விட்டுக் கொடுத்துள்ளனர். ரஷித் விட்டுக் கொடுத்துள்ள ரன்கள் வெறும் 127 தான். அதேபோல், இந்திய ஸ்பின் ட்வின்ஸ்கள் தலா ஒரு மெய்டன் ஓவர் மட்டுமே வீசியுள்ளனர். ஆனால், ரஷித் 5 மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார்.
இதெல்லாம், வெறும் தொடக்கம் தான். உலக அரங்கில் சிறிய அணியாக விளங்கும் ஆப்கானிஸ்தான் விளையாடும் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால், ரஷித் சாதனைகள் பல படைப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.
இருப்பினும், குறைவான வாய்ப்பு கிடைக்கும் போதும் தனது அணிக்காக அபாரமாக பங்காற்றி வரும் ரஷித் கான், விரைவில் புது உலக சாதனையை எதிர்நோக்கியுள்ளார். ஆம்! சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பவர் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க். இவர் 52 போட்டிகளில் விளையாடி தனது 100வது சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.
இப்போது அந்த சாதனையை தகர்க்க காத்திருக்கிறார் ரஷித். இதுவரை 37 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரஷித், 86 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இன்னும் 14 விக்கெட்டை வீழ்த்தினால் 100வது ஒருநாள் விக்கெட்டை கைப்பற்றிவிடுவார். மிட்சல் ஸ்டார்க்கின் 52 போட்டிகள் என்ற சாதனையை உடைக்க ரஷித் ஒரு போட்டிக்கு ஒரு விக்கெட் எடுத்தாலே போதும். ஆனால், இவர் போகும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த நான்கைந்து போட்டிகளில் புதிய வரலாற்றை படைத்து விடுவார் போலிருக்கிறது. 2010ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டார்க், 2016ல் தான் இச்சாதனையை படைத்தார். ஆனால், 2015ல் அறிமுகமான ரஷித், இந்தாண்டே இச்சாதனையை படைத்து விடுவார் என்பது உறுதி.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மெகா அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை ரஷித் பெறும் போது மட்டுமே, இவரது பவுலிங் திறமை குறித்து உலகளவில் போற்றப்படும். அதற்கான நேரமும் ஏற்கனவே கனிந்துவிட்டது எனலாம்.
ஆம்! டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, வரும் ஜூன் மாதம் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
வாழ்த்துகள் ரஷித்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.