இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்று மாலை அனைத்து ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இவர் வருகிற 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்த பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிசிசிஐ இதனை முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி அளித்துள்ள பேட்டியில், "புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்றார்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு(COA), இன்றே கோச் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியிருந்தது. இது குறித்து கேப்டன் விராட் கோலிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அவருடன் ஆலோசனை நடத்தி இன்றே கோச்சை அறிவிக்க வேண்டும் என தெரிவித்தது.
ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ஆகியோர் நேற்று கிரிக்கெட் ஆலோசனை குழுவால் நேர்காணல் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.