இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய் கிழமை மாலை அனைத்து ஊடகங்களிலும் தகவல் வெளியானது. இவர் வருகிற 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இந்த பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதன் பின்னர் பிசிசிஐ இந்த தகவலை மறுத்தது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறும்போது, "புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை பிசிசிஐ முதலில் மறுத்த நிலையில், பின்னர் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிசிசிஐ தலைவர்(பொறுப்பு) சி.கே கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் ஆலோசனனைக் குழுவின் பரிந்துரைபடி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கான் ஆகியோரை நியமிப்பது என முடிவு செய்துள்ளோம். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். முன்னதாக அவர்களிடம், சவுரங் கங்குலி, சச்சின், வி.வி.எஸ் லஷ்மன் ஆகியோர் அடங்கிய ஆலோசனை குழு திங்கள்கிழமை நேர்காணல் நடத்தியது.