டீம் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை, கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ-யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், கிரிக்கெட் ஆலசோனைக் குழு இடம்பெற்றுள்ள சவுரவ் கங்குலி கடந்த 2-ஆம் தேதி அளித்த பேட்டியில், "வரும் ஜுலை 10-ஆம் தேதி நடக்கும் நேர்முகத் தேர்வில், தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார்" என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நாளை (ஜுலை 10) புதிய தலைமை பயிற்சியாளரை மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேர்வு செய்கிறது. சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வீரேந்திர சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ், டோத்தா கணேஷ், ரவி சாஸ்திரி, வெங்கடேஷ் பிரசாத், லான்ஸ் குளூஸ்னர், ராகேஷ் ஷர்மா, ஃபில் சிம்மன்ஸ், உபேந்திரநாத் பிரம்மாச்சாரி ஆகியோர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர்.
இதில் ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, சிம்மன்ஸ், பைபஸ், ராஜ்புட் ஆகிய ஆறு பேரிடம் மட்டுமே, கிரிக்கெட் ஆலோசனைக் குழு நாளை நேர்காணல் நடத்துகிறது.
இந்நிலையில், விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு கடும் போட்டியாளராக சேவாக் இருக்கலாம். ஆனால், சேவாக்கிற்கு பயிற்சியாளராக அனுபவம் போதாது என்று கருதப்படுகிறது.
உள்நாட்டு பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவுக்கே கேப்டன் விராட் கோலி, தன் அதிகாரத்தைக் காட்டியதால், அயல்நாட்டுப் பயிற்சியாளர் மூலம் மேலும் தர்மசங்கடமே ஏற்படலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதனால், ரவி சாஸ்திரிக்கே பயிற்சியாளராக அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.