Ravi Shastri - ICC World Cup 2023 Tamil News: ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டது. அதன்படி, இந்திய மண்ணில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய அணியின் முதல் ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மொத்தமாக இந்திய அணி 9 லீக் போட்டிகளில் களமிறங்க உள்ளது.
ரவி சாஸ்திரி கருத்து
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, பேட்டிங் வரிசையில் இடது கை வீரர்கள் இல்லாதது 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவிற்கான ஒரு விடுபட்ட இணைப்பு என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், 2011 இந்திய பேட்டிங் ஆர்டருடன் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருடன் ஒப்பிட்டும் பேசியுள்ளார்.
"இந்தியாவுக்கு அது ஒரு சவாலாக இருக்கும். இதனை நீங்கள் நெருக்கமாகப் பார்க்க வேண்டும். மீண்டும் ஃபார்ம் முக்கியமானது. நீங்கள் சரியான சமநிலையை அடைய வேண்டும். இடது கை ஆட்டக்காரர் டாப் ஆடரில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா. அவர் தொடக்க வீரராகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் முதல் மூன்று அல்லது 4வது இடத்தில் ஒருவர் இருக்க வேண்டும். இந்த அனைத்து விருப்பங்களையும் நீங்கள் எடைபோட வேண்டும். அதனால், முதல் 6 இடங்களில், இரண்டு இடது கை வீரர்களைப் பார்க்க விரும்புகிறேன்.
நீங்கள் சிறப்பாகச் செய்த போதெல்லாம் <இடது கை பேட்ஸ்மேன்கள் நன்கு பங்களித்துள்ளனர்>. 2011 இல், உங்களிடம் <கௌதம்> கம்பீர், யுவராஜ் <சிங்> மற்றும் <சுரேஷ்> ரெய்னா இருந்தனர். 1974-ல் <ஆல்வின்> கல்லிச்சரன், <ராய்> ஃபிரடெரிக்ஸ், <கிளைவ்> லாயிட் இருந்தனர். 1979ம் ஆண்டிலும் அதே வீரர்கள் தான் இருந்தனர். 1983 அணியில் மட்டுமே இடது கை வீரர் இல்லை. ஆனால் அந்த முழு போட்டியும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக இருந்தது. 1987 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா போதுமானதாக இருந்தது. அவர்கள் டாப் ஆடரில் <ஆலன்> பார்டரை வைத்திருந்தனர். மேலும் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் லோ ஆடரில் இருந்தனர்.
1996ல் இலங்கை அதை மீண்டும் நிரூபித்தது. <சனத்> ஜெயசூர்யா, <அர்ஜுனா> ரணதுங்கா, <அசங்க> குருசின்ஹா போன்ற இடது கை வீரர்கள் அந்த அணியின் வெற்றிக்கு உதவினர். பின்னர் ஆஸ்திரேலியா, கில்கிறிஸ்ட் மற்றும் ஹேடன்ஸுடன் போன்ற வீரர்கள் இருந்தனர். இங்கிலாந்திடம் இப்போது உள்ளது. அந்த கலவையும் சமநிலையும் இந்திய அணியில் உருவாக்கப்பட வேண்டும்." என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அட்டவணை:
- இந்தியா vs ஆஸ்திரேலியா – அக்டோபர் 8 – சென்னை
- இந்தியா vs ஆப்கானிஸ்தான் – அக்டோபர் 11, டெல்லி
- இந்தியா vs பாகிஸ்தான் – அக்டோபர் 15, அகமதாபாத்
- இந்தியா vs வங்கதேசம் – அக்டோபர் 19, புனே
- இந்தியா vs நியூசிலாந்து – அக்டோபர் 22, தர்மசாலா
- இந்தியா vs இங்கிலாந்து – அக்டோபர் 29, லக்னோ
- இந்தியா vs குவாலிஃபையர் – நவம்பர் 2, மும்பை
- இந்தியா vs தென் ஆப்ரிக்கா – நவம்பர் 5, கொல்கத்தா
- இந்தியா vs குவாலிஃபையர், நவம்பர் 11, பெங்களூரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil