இதயங்களை வென்றது ஆர்சிபி அல்ல... கேப்டன் விராட் கோலி தான்!

சிஎஸ்கே வின்னிங் தி மேட்ச்... ஆர்சிபி வின்னிங் தி ஹார்ட்ஸ்

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருக்கும் ஆக்ரோஷத்தில் பாதியளவு கூட, பெங்களூரு அணிக்கு இல்லை என்பதே உண்மை. அதனால் தான், கடந்த இரு சீசன்களாக அவர்கள் தோல்வியை மட்டுமே தவறாமல் பெறுவதற்கு காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை!.

இந்த மேட்சில் ஜெயிப்பார்கள்… அடுத்த மேட்சில் ஜெயிப்பார்கள் என ஒவ்வொரு முறையும் நம்பி வரும் பெங்களூரு ரசிகர்கள், நேற்று அப்படியொரு சாத்தியமான நம்பிக்கையில் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வந்திருந்தனர். எதிரணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. ஒன்றும் அவ்வளவு பலம் பொருந்திய அணியும் கிடையாது. ரசல்ஸ் என்ற ஒருவரின் பெயரே, அந்த அணியில் அதிகள் ஒலிக்கும்.

ஆக, மீண்டும் வெற்றி எனும் சாலையில் காலடி எடுத்து வைக்க ஆசைப்பட்ட ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, டாஸ் இழந்ததால், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கால் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டார். ஆர்சிபி அணியில் மொத்தம் மூன்று மாற்றங்கள். வைரல் ஃபீவரால் பாதிக்கப்பட்டுள்ள டி வில்லியர்ஸுக்கு பதிலாக டிம் சவுதியும், பவன் நெகிக்கு பதிலாக மனன் வோஹ்ராவும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக முருகன் அஷ்வினும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க வீரர்கள் மெக்குல்லம் 28 பந்தில் 38 ரன்களும், டி காக் 27 பந்தில் 29 ரன்களும் எடுத்தனர். ஆக, தொடக்க பார்ட்னர்ஷிப் 8.1 ஓவரில் 67 ரன்கள் எடுத்திருந்த போது பிரிந்தது. அதன்பிறகு, களமிறங்கிய கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 பந்தில் 68 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸரும், 5 பவுண்டரிகளும் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 155. டி20ல் இது ஒகே ரகம் தான் என்றாலும், கடினமான அந்த பிட்சில், பொறுப்புடன் ஆடியவர் விராட் கோலி மட்டுமே. வேறு எவரும் 40 ரன்கள் கூட எடுக்கவில்லை. இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.

தொடர்ந்து சேஸிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 19.1வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து வென்றது. கிரிஸ் லின் இறுதி வரை களத்தில் நின்று 52 பந்தில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 1 ரன் எடுத்திருந்த போது, லின் கொடுத்த மிக மிக எளிதான கேட்சை ஆர்சிபி கோட்டை விட்டது தான் கொடுமையான விஷயம்.

எப்போதும் ரசலுக்கு முன்பாக களமிறங்கும் தினேஷ் கார்த்திக், நேற்று அவருக்கு அடுத்ததாக களமிறங்கினார். வந்ததும் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். அப்போது, 18.5வது சிராஜ் ஓவரில், தினேஷ் கார்த்திக் மற்றொரு சிக்ஸர் அடிக்க முயன்ற போது, லாங் ஆனில் நின்றுக் கொண்டிருந்த விராட் கோலி பாய்ந்து வந்து விழுந்து பிடித்து அதை கேட்சாக்கினார். உண்மையில் அது மிகவும் டஃப்பான ஒரு கேட்ச் என்றால், அது ‘டூமச்’ கிடையாது. தோற்கப் போகும் நேரத்தில் கூட, கேப்டன் கோலியின் வெறித்தனமான செயல்பாடு, மந்தமான பவுலிங், அதைவிட மந்தமான பீல்டிங் செய்த சக வீரர்களை கொஞ்சம் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. ஏழாவது போட்டியில் ஆடியுள்ள பெங்களூரு அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாகும். புள்ளிப்பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.

வெற்றிக்காக படாதபாடு படும் கோலிக்காகவாவது, இனி ஆர்சிபி பிளேயர்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். ‘சிஎஸ்கே வின்னிங் தி மேட்ச்… ஆர்சிபி வின்னிங் தி ஹார்ட்ஸ்’ என்று ரசிகர்களால் எப்போதும் கூறப்படுவது உண்டு. ஆனால், உண்மையில் இதயங்களை வென்றது ஆர்சிபி அல்ல.. விராட் கோலியே!!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close