கிடைத்த வாய்ப்பும் வீணாப்போச்சே.....கோலி பரிதாபம்!

இரவு 11.30 மணிக்கு போட்டித் தொடங்கும் என்றும், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படும் என கூறப்பட்டது. இரு அணி ரசிகர்களும் தூங்காமல் எப்படியாவது...

நடப்பு 10-வது ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்கு தற்போதுதான் டென்ஷன் எகிறத் தொடங்கியுள்ளது. அதில், மிக முக்கியமான அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. கேப்டன் விராட் கோலி தலைகீழ் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தும் வெற்றிப் பாதைக்கு அந்த அணியால் திரும்ப முடியவில்லை.

இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த ஹைதராபாத் சன்ரைசர்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான போட்டி, மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால், பெங்களூரு மொத்தம் 5 புள்ளிகளும், ஹைதராபாத் 9 புள்ளிகளும் பெற்றுள்ளன. இது சன்ரைசர்ஸ் அணிக்கு வேண்டுமானால், நல்ல விஷயமாக இருக்கலாம். ஆனாலும் பெங்களூரு அணிக்கு மிகப் பெரிய அடி தான்.

ஏனெனில், அந்த அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன் ஆல் அவுட் எனும் மோசமான தோல்வியும் அதில் அடக்கம். எனவே மீதமுள்ள 8 போட்டிகளில் குறைந்தது ஆறு போட்டிகளையாவது வென்றால் தான் பிளேஆஃப் சுற்றினை பற்றி பெங்களூரு நினைத்துப் பார்க்க முடியும். இதனால், ஹைதராபாத்திற்கு எதிரான நேற்றைய போட்டியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று கோலிப் படை காத்திருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மழை வந்து டாஸ் கூட போடவிடாமல் மோசம் செய்துவிட்டது. இத்தனைக்கும் இரவு 11.30 மணிக்கு போட்டித் தொடங்கும் என்றும், 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படும் என கூறப்பட்டது. இரு அணி ரசிகர்களும் தூங்காமல் எப்படியாவது ஆட்டத்தை கண்டுவிட வேண்டுமென்று காத்திருந்தனர். ஆனால், போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமோ இல்லையோ, கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிளேஆஃப் சுற்று வாய்ப்பு உண்டா?

இருக்கு…ஆனா இல்ல…அப்டினு எஸ்.ஜே.சூர்யா டோனில் தான் நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, பெங்களூரு அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டும் பாக்கியுள்ளது. அந்த 6 போட்டிகளிலும், அதாவது அனைத்து போட்டியிலும், அவர்கள் வெற்றிப் பெற வேண்டும். இந்த சாதனையை அந்த அணி நிகழ்த்திவிட்டால், மொத்தம் 17 புள்ளிகளை பெற்றுவிடும். இதனால், டாப்-4ல் இடம்பெற்று பிளேஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. இல்லையெனில், மிகவும் கடினம் தான்.

சரித்திரத்தை ஒருமுறை திருப்பி பார்த்தோமேயானால், கடந்த 9 ஐபிஎல் சீசனிலும் 16 புள்ளிகளுக்கும் கீழ் புள்ளிகள் பெற்று 4 முறை மட்டுமே அணிகள் பிளேஆஃப் சென்றிருக்கின்றன. எனவே 6 போட்டிகளையும் பெங்களூரு வென்றால் அந்த அணிக்கு நல்லது.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு புனேவில் தொடங்கும் 30-வது லீக் போட்டியில், புனே சூப்பர் ஜெயண்ட் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 புள்ளிகளுடன் ஸ்மித்தின் புனே 4-வது இடத்திலும், 10 புள்ளிகளுடன் கம்பீரின் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளன. பிளேஆஃப் சுற்றுக்கு இரு அணிகளுக்கும் வரிந்து கட்டுவதால், போட்டியில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close