நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது. இத்தொடரில், பாகிஸ்தான் அணி சார்பில் தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இமாம்-உல்-ஹக் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். உலகளவில் 13-வது வீரராகவும் இச்சாதனையை புரிந்துள்ளார். இதற்கு முன், பாகிஸ்தானின் சலீம் இலாஹி என்ற வீரர், தனது அறிமுக போட்டியில் சதம் அடித்திருந்தார்.
22-வயதே ஆன, இந்த இளம் பாக்., வீரர் சதம் அடித்த பின்னர், தனக்கு வந்த ஃபோன் கால்கள் மற்றும் மெசேஜ்களின் அன்புத் தொல்லையால் தனது இன்டர்நெட்டையே ஆஃப் செய்து விட்டாராம். இதுகுறித்து இமாம் அளித்த பேட்டியில், “நான் சதம் அடித்த பின்னர், 300-400 பெண் ரசிகைகளிடம் இருந்து ஃபோன் கால்கள் மற்றும் மெசேஜ்கள் மூலம் வாழ்த்துகள் குவிந்தன. எனது சமூக தளங்கள் ரசிகைகளின் அன்பால் நிரம்பி வழிந்தன. இறுதியில், நான் எனது மொபைல் இண்டர்நெட்டை ஆஃப் செய்துவிட்டேன். எனது அறிமுக போட்டியிலேயே சதம் அடிப்பேன் என நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. அணிக்கு பயனுள்ள வகையில் விளையாடியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
உண்மையாக சொல்ல வேண்டுமெனில், எனது சாதனை குறித்து எனக்கு தெரியாது. நான் ஓய்வறைக்கு சென்றபின், சர்ஃபரஸ் அஹ்மத் என்னிடம் அதைப் பற்றிக் கூறினார். முதல் போட்டியில் சதம் அடித்ததற்காக பெருமைப்படுகிறேன். பாகிஸ்தானிற்காக இதை செய்ததற்காக மகிழ்கிறேன். எனக்கு இதனால் பெரிதாக எந்த மாற்றமும் தோணவில்லை. ஏனெனில், நான் கிரிக்கெட் குடும்பத்தில் இருந்து வளர்ந்து வந்தவன். எனக்கு தன்னம்பிக்கை அதிகம், அதேசமயம் நான் முதிர்ச்சியானவனும் கூட. நாம் எப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும். இல்லையெனில், மக்கள் நம்மை குறை சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலாவது பாகிஸ்தானிற்கு உலகக்கோப்பையை வென்றுத் தர வேண்டும் என்பதே எனது கனவு” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாகிஸ்தான் வீரரும், பாகிஸ்தான் தலைமை தேர்வுக் குழுத் தலைவருமான இன்சமாம்-உல்-ஹக்கின் உறவினர் தான் இமாம் என்பது குறிப்பிடத்தக்கது.