யார் இந்த ரிஷப் பண்ட்? அடுத்த தோணியா?

எனவே எப்படிப் பார்த்தாலும், இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை அணியில் விளையாட வாய்ப்புள்ளது.

நேற்று நடந்த 42-வது ஐபிஎல் போட்டியில், இளம் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அனைவரது கவனத்தையும் ஒருசேர தன் பக்கம் திரும்பியுள்ளார். ஆம்! குஜராத் லயன்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் நேற்று இரவு மோதின. இதில், குஜராத் நிர்ணயித்த 209 ரன்கள் எனும் இமாலய சேஸிங்கை துரத்த ஆரம்பித்தது டெல்லி. கேப்டன் கருண் நாயர் 3-வது ஓவரில் அவுட்டாகி வெளியேறிய போது, அணியின் ஸ்கோர் 24/1.

அப்போது களமிறங்கிய இந்த இளம் புயல் ஆடிய வெறித்தனத்தை பார்த்து திக்கற்று நின்றார் குஜராத் கேப்டன் ரெய்னா. அவர் நொந்து கொண்டு நின்றதை பார்த்தபோது, நமக்கே வேதனையாக இருந்தது. என்னபண்றது..! நம்ம பழைய சிஎஸ்கே பிளேயர் ஆச்சே…

ஐந்தாவது ஓவரின் முதல் மூன்று பந்துகள் 6,6,4…. அதிலிருந்து அடிக்க ஆரம்பித்த ரிஷப், குஜராத்தின் எந்த பவுலரையும் விட்டு வைக்கவில்லை. முடிவில், 43 பந்துகளில் 97 ரன்னில் அவுட்டாகி, மூன்று ரன்னில் தனது சதத்தை நழுவவிட்டார்.

ஆனால் இவர் அவுட்டான பின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட ட்வீட் என்ன தெரியுமா? “10 ஐபிஎல் சீசன்களிலும் நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸில் இதுவும் ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ரிஷப் பண்ட்?

யார் போட்டாலும், எப்படி போட்டாலும் அதனை பயமில்லாமல் எதிர்கொள்ளும் திறமைப்படைத்தவர் தான் இந்த 19 வயதான ரிஷப். இதுதான் அவரது மிகப்பெரிய பலம். டி20ஐ பொறுத்தவரை, அவரது ஆட்டங்களை கவனித்தால், பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர் போல் தான் இருப்பார். ஆனால், அனைத்து பந்துகளையும் அடித்து நொறுக்க வேண்டும் என்பதே, அவரின் எண்ணமாக இருக்கும். இதனால், நிறைய முறை சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறியுள்ளார். இந்நிலையில், அவருக்கான நாள் நேற்று தான் அமைந்திருக்கிறது. போட்டியை மைதானத்திற்கு வெளியே இருந்த ரசித்த ரசிகர்கள், வீட்டில் டிவியில் இருந்த பார்த்த நேயர்கள், மைதானத்தில் விளையாடிய வீரர்கள் என அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார் என்றே கூறலாம்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க பேட்ஸ்மேன் இவர்தான். ஆறு போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் (ஸ்டிரைக் ரேட் – 104) என அசத்தலான ஆட்டத்தையே தொடர் முழுவதும் வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக, இரண்டு போட்டிகளில் செம மாஸ் காட்டினார் ரிஷப் பன்ட்.

நேபாள அணிக்கு எதிரான போட்டியில், ஆரம்பம் முதலே அந்த அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அந்தப் போட்டிக்கு முன்புவரை, 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டிகளில்,வெஸ்ட் இன்டீசைச் சேர்ந்த ட்ராவான் கிரிஃப்பித் எனும் வீரர் 19 பந்துகளில் அரைசதம் அடித்திருந்ததே, அதிவேகமான அரைசதமாக இருந்தது. ஆனால், அந்த போட்டியில், ரிஷப் 18 பந்துகளில் அரைசதம் விளாசி, அந்தச் சாதனையை உடைத்தார். (அடுத்த தோணி-னு தோணுதா!! சேம் ஃபீலிங்…). பின், நமீபியா அணிக்கெதிரான போட்டியில், 111 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அதேபோல், 2016 ரஞ்சி சீசனில், டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப், அதிரடியான ட்ரிபிள் செஞ்சுரி, 48 பந்துகளில் அதிரடியான செஞ்சுரி, அசத்தலான டபுள் செஞ்சுரி என வெரைட்டி விருந்து வைத்தார். இதனால், கடந்த 2016-ஆம் ஆண்டு, இவரது அடிப்படை விலையான 10 லட்சத்தைவிட, 19 மடங்கு அதிக விலைக்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை வாங்கியது. அந்த சீசனில் 10 போட்டிகளில் 200 ரன்கள் எடுத்தார் (ஸ்டிரைக் ரேட் – 130). நடப்பு சீசனில் இதுவரை 10 போட்டிகளில் 281 ரன்களை எடுத்துள்ளார் (ஸ்டிரைக் ரேட் – 176).

இப்போது இந்தியனுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக ஆடிவரும் ரிதிமான் சாஹா (32), தினேஷ் கார்த்திக் (31), பார்த்திவ் படேல் (31), நமன் ஓஜா (31) ஆகிய நால்வருமே 30 வயதை கடந்துவிட்டார்கள். இவர்களைத் தவிர மற்ற ஆப்ஷன்களாக உள்ள ராபின் உத்தப்பா, கேதர் ஜாதவ் ஆகிய இருவருமே தற்போது 31 வயதை எட்டியுள்ளார்கள். எனவே எப்படிப் பார்த்தாலும், இவர்கள் இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை அணியில் விளையாட வாய்ப்புள்ளது.

இதனால், இப்போதிலிருந்தே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட்ற்கு, பிசிசிஐ அதிக வாய்ப்புகளை கொடுத்தால், நிச்சயம் அவர் அடுத்த தோனியாக உருவாக வாய்ப்புள்ளது என்பதில் சந்தேகமில்லை.

×Close
×Close