New Zealand vs India, ODI series - Rishabh Pant Tamil News
Rishabh Pant Tamil News: 8வது டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றது. இந்த தொடருக்கான அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது. உலகக் கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட இந்தியாவின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
Advertisment
இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு வீரர்கள் இடம்பிடித்தனர். இதில், தினேஷ் கார்த்திக்கிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர் அதை பெரிய அளவில் பயன்படுத்த தவறி இருந்தார். அதேநேரத்தில் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குரல்கள் வலுத்தன. அவ்வகையில், அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 6 ரன்கள் எடுத்த அவர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
டி20 - ஒருநாள் தொடர்களில் சொதப்பி எடுத்த பண்ட்
Advertisment
Advertisements
டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடருக்கு முன், டி20 தொடரில் பண்டை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். அதன்படி, பண்ட்டுக்கு தொடக்க வீரராக களமாடும் வாய்ப்பும் கிடைத்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது மற்றும் 3வது போட்டியில் பண்ட் எடுத்த ஸ்கோர்கள் 6 மற்றும் 11, மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே. தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டியில் அவர் ஜொலிப்பார் என்றும் சஞ்சுவை விட பண்ட் மிடில்-ஆடரில் பொருத்தமான வீரர் என்றும் நம்பிய அணி நிர்வாகம் அவருக்கு 3 போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்தது.
இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் 25 இன்னிங்சில் 855 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் அதிகபட்ச ரன் 125. ஒருநாள் தொடர்களில் ஒரு சதம், 5 அரை சதங்களை விளாசியுள்ளார். 29.48 சராசரியுடன் 107.5 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பண்ட் 15, 10 என்று ரன்கள் எடுத்தார். அவரின் இந்த தடுமாற்ற ஆட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்படும் பண்ட்டுக்கு நியூசிலாந்தில் என்ன ஆயிற்று? என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது. டி20யில் அவருக்கும் தினேஷ் கரத்திக்கிற்கும் இடையே போட்டி இருந்தது. ஆனால், தற்போது அது ஓய்ந்து, இப்போது சஞ்சு சாம்சன் vs ரிஷப் பண்ட் என்ற கோணத்தில் நகர்கிறது.
சஞ்சுவுக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு கொடுக்காமல் பண்டிற்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தது குறித்து பயிற்சியாளர் லக்ஷ்மணனை காங்கிரஸ் எம்.பி. கடுமையாக சாடி இருந்தார். ஏற்கனவே, சீனியர் வீரர்கள் செய்த குளறுபடியால் பலரது தலையையும் உருட்டி வரும் பிசிசிஐ பண்ட்டின் இந்த தொடர் சொதப்பல் ஆட்டத்தை எப்படி கையாள போகிறது? அவருக்கு சில காலம் ஓய்வு அளிக்குமா? அல்லது சஞ்சுவை அவரது இடத்தில் கொண்டு வருவார்களாக? என்பது போன்ற தொடர்ச்சியான கேள்விகள் எழுகின்றன.
அடுத்த மாதம் வங்க தேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளிலும் பண்ட் இடம் பிடித்துள்ளார். அவருக்கு இந்த தொடர்களில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? அவரின் எதிர்காலம் என்ன ஆகும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.