இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரருமான ராபின் உத்தப்பா, கடந்த 2002 முதல் கர்நாடக அணிக்காக மட்டுமே உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.
இந்நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த உத்தப்பாவை அடுத்த சீசனில் உள்ளூர் போட்டிகளில் கேரள அணிக்காக ஆட வைக்க, கேரள கிரிக்கெட் சங்கம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் ஜார்ஜ், "கேரளவுக்காக தொழில்முறை கிரிக்கெட் வீரராக ஆடவேண்டும் என்று கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் உத்தப்பாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஐபிஎல் முடிந்தவுடன் எங்களுக்கு பதில் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது பதிலுக்காக காத்திருக்கிறோம். அனைத்து சிறப்பாக அமைந்தால், அடுத்த சீசனில் கேரள அணிக்காக உத்தப்பா ஆடுவார்" என்றார்.
கர்நாடக அணியிலிருந்து உத்தப்பா வெளியேறுவது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சர்ய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஏனெனில், கடந்த ரஞ்சி சீசனின் போது நடந்த காலிறுதிப் போட்டியில், உத்தப்பாவை கர்நாடக தேர்வுக் குழு நீக்கியது. கடந்த மூன்று ரஞ்சி சீசனின் முதல் இரு சீசனில், முறையை 759, 912 ரன்களைக் குவித்தார் உத்தப்பா. ஆனால், கடந்த சீசனில் 12 இன்னிங்ஸில் மொத்தமாகவே 328 ரன்கள் மட்டும் எடுத்தார். அதில் ஒரு சதமும்(128) அடங்கும்.
இதுகுறித்து, உத்தப்பாவை தொடர்பு கொண்டு பேசிய போது, 'கேரள கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவது உண்மைதான். ஆனால், இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை' என்றார்.