இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய பிறகு, குவஹாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆஸி., அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரெண்டோர்ஃப், இந்திய அணியின் ரோஹித், கோலி, மனீஷ் பாண்டே, தவான் ஆகிய நான்கு முன்னணி வீரர்களையும் ஒற்றை இலக்கில் அவுட்டாக்கி அணியை நிலைகுலைய வைத்தார்.
குறிப்பாக, கேப்டன் கோலியை பூஜ்யத்தில் வெளியேற்றினார். இதனால், இந்திய அணியால் 118 ரன்களே எடுக்க முடிந்தது. எளிதான இலக்கை துரத்தி ஆஸி., 15.3-வது ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 62 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தனர்.
குவஹாத்தியில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்ததால், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பியது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேற்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் நாயகர்கள் தங்கள் மண்ணில் விளையாடுவதை பார்க்க மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்திய அணி நேற்று மிகவும் மோசமாக விளையாடி தோற்றதால் அவர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகினர்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின், ஆஸி., வீரர்கள் தங்கள் பேருந்தில் ஏறி ஹோட்டலுக்கு செல்லத் தயாரானார்கள். அப்போது, அந்த பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் பீதிக்குள்ளான ஆஸி., வீரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
பேருந்து தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.