இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மேன்ஸ் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரோலண்ட் ஓல்ட்மேன்ஸ். இந்திய ஹாக்கி அணி கடந்த 2015-ஆம் ஆண்டில் இவர் தலைமையிலான முதல் போட்டியில் களமிறங்கியது.
இந்நிலையில், கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் இந்திய ஹாக்கி ஆடவர் அணியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை எனக் கூறி, அதன் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க ஹாக்கி இந்தியா அமைப்பின் உயர் செயல்திறன் மற்றும் மேம்பாட்டுக் குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடியது.
ஹர்பிந்தர் சிங், பி.பி.கோவிந்தா, பாஸ்கரன், தொய்பா சிங், பிரோஸ் அன்சாரி உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதில், இந்திய ஹாக்கி அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வது, எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
இறுதியில், இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரோலண்ட் ஓல்ட்மேன்ஸை நீக்குவது என முடிவெடுக்கப்பட்டு, அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், 2018-ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள உலகக் கோப்பை தொடர், 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹாக்கி இந்தியா தேர்வுக்குழுவின் தலைவர் ஹர்பிந்தர் சிங் கூறுகையில், "ஆசிய அளவிலான போட்டிகளின் வெற்றிகள் அளவுகோலாக இருக்க முடியாது. சர்வதேச அளவிலான போட்டிகளில் நமது செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலத்துக்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது" என்றார்.
அதேசமயம், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யப்படும் வரை, இடைக்கால பயிற்சியாளராக உயர் செயல்திறன் இயக்குனர் டேவிட் ஜான் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.