ரோகித் சர்மா 3-வது இரட்டை சதம் விளாசினார். மொகாலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 392 ரன்கள் குவித்தது.
ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றில் பங்கேற்பது இதுவே முதல் முறை! கேப்டனாக அவரது முதல் ஒருநாள் போட்டி, தர்மசாலாவில் பெரும் சோகத்துடன் முடிந்தது. அதில் 112 ரன்களில் சுருண்ட இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கவும் செய்தது.
ரோகித் சர்மாவுக்கு அது பெரும் அதிர்ச்சி! ஆனாலும் அடுத்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என தெரிவித்திருந்தார். இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி, இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை, பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி, ஆரம்பத்தில் மெதுவாக மட்டையை சுழற்றினார். போகப் போக அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. 50 ஓவர்களும் முழுமையாக களத்தில் நின்ற ரோகித் சர்மா, ஆட்டம் இழக்காமல் 208 ரன்கள் (153 பந்துகள்) குவித்தார். அவரது பங்களிப்புடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் திரட்டியது. இந்தியா தரப்பில் ஷிகர் தவான் (68 ரன்கள்), ஷ்ரேயாஸ் அய்யர் (88 ரன்கள்), டோனி (7 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (8 ரன்கள்) ஆகியோர் அவுட் ஆனார்கள்.
ரோகித் சர்மாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது 3-வது இரட்டை சதம் ஆகும். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் இது அபார சாதனை! உலகில் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. சச்சின் டெண்டுல்கர் (200 ரன்கள்), ஷேவாக் (219 ரன்கள்), கிரிஸ் கெய்ல் (215 ரன்கள்), மார்டின் கப்தில் (237 ரன்கள்) ஆகியோர் தலா ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார்கள். ரோகித் சர்மா ஒருவரே 3 இரட்டை சதங்கள் (209, 264, 209) அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.