முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை விட, ரோஹித் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "எனது இந்த கருத்தை விராட் கோலியின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், தற்போதைய நிலையில் கோலியை விட ரோஹித் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை இங்கு நான் சொல்லியே ஆக வேண்டும்,
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி திகழ்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், குறுகிய ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், கோலியை ரோஹித் முந்துகிறார்.
ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ரோஹித் தனது திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். எந்தவிதமான சூழ்நிலையிலும் அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி, அதனை முடித்துக் கொண்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ரன்களை குவிக்க உள்ளார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த ஆண்டில் 50 ஓவர் மற்றும் டி20 போட்டி சாதனைகளை பார்த்தோமேயானால், ரோஹித்தின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் உள்ளது. இலங்கையுடன் தான் ரோஹித் அதிக சாதனைகள் படைத்துள்ளார் என ரசிகர்கள் கூறலாம். ஆனால், ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ரோஹித் ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்து வருகிறார்" என்றார்.