ரோகித் சர்மா இரட்டை சதம் : மனைவிக்கு திருமண நாள் பரிசு, கண்ணீர் விட்ட ரித்திகா

ரோகித் சர்மா தனது திருமண நாளில் இரட்டை சதம் அடித்தார். காலரியில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு இந்த ஆட்டத்தை ரசித்தார் அவரது மனைவி ரித்திகா.

By: Updated: December 13, 2017, 05:20:59 PM

ரோகித் சர்மா தனது திருமண நாளில் இரட்டை சதம் அடித்தார். காலரியில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டு இந்த ஆட்டத்தை ரசித்தார் அவரது மனைவி ரித்திகா.

ரோகித் சர்மா இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். இந்த ஆட்டத்தை மைதானத்தின் கேலரியில் அமர்ந்து, ரோகித் சர்மாவின் காதல் மனைவி ரித்திகா சாஜ்டே ரசித்தார்.

ரோகித் சர்மாம், இந்த ஆட்டத்தின் 41-வது ஓவரில் சதத்தை எட்டினார். அப்போது ரித்திகாவும் எழுந்து நின்று கைத்தட்டினார். ‘பேட்’டை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா, ரித்திகாவை நோக்கி ‘பிளையிங் கிஸ்’ பறக்க விட்டார்.

ரோகித் சர்மா சதத்தை கடந்ததுமே, அவரது இரட்டை சத வாய்ப்பு குறித்து வர்ணனையாளர்கள் விவாதிக்க ஆரம்பித்தனர். அதை நிஜமாக்கும் வகையில் ரோகித் சர்மா சிக்சர்களாக பறக்க விட்டார்.

ரோகித் சர்மா 190 ரன்களைக் கடந்ததும் அவரது மனைவி ரித்திகாவின் முகத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவரையும் அறியாமல் அவரது கண்கள் பனித்தன. 200 ரன்களை நெருங்கிய நிலையில் இரண்டு ரன்களுக்கு ஓடிய ரோகித் சர்மா, ரன் அவுட் ஆகிவிடுவாரோ? என்கிற சூழலும் வந்தது. ஆனால் ‘டைவ்’ அடித்து விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார் அவர். இந்தத் தருணத்தில் ரித்திகா அழுதேவிட்டார்.

ரோகித் சர்மா இரட்டை சதத்தைக் கடந்ததும், ரித்திகாவிடம் ஆர்ப்பரிப்பைக் காண முடியவில்லை. மாறாக ஆனந்தக் கண்ணீரையே உகுத்தார். மைதான கேமராக்கள் ரோகித் சர்மாவின் ‘ஷாட்’களை காட்டிய அதே வேளையில், ரித்திகாவின் பதற்ற உணர்வுகளையும் முழுமையாக பதிவு செய்தன.

ரோகித் சர்மா கடந்த 2015-ம் ஆண்டு ரித்திகா சாஜ்டேவை மணந்தார். அடிப்படையில் ரித்திகா, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம் ஒன்றின் மேலாளர்! உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி அனுபவம் பெற்றவர் அவர்! தொழில் நிமித்தமான பணியின்போதே ரோகித் சர்மாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் 6 ஆண்டுகள் காதலித்து வந்தனர்.

ரோகித் சர்மாவின் ஆட்டங்கள் எதையுமே தவறவிடாமல் பார்க்கும் வழக்கம் உடையவர் ரித்திகா. இன்று (டிசம்பர் 13) அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலான நாள்! ஆம், இதே டிசம்பர் 13-ம் தேதிதான் 2015-ம் ஆண்டு ரோகித் சர்மாவும், ரித்திகாவும் திருமணம் செய்து கொண்டனர். எனவே திருமண நாளில் ரோகித் தனது சாதனையை நிறைவு செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே ரித்திகாவுக்கு அவ்வளவு பதற்றத்தை கொடுத்தது.

ரோகித் சர்மா 200 ரன்களை கடக்க இருந்ததைவிட, மூன்றாவது முறையாக 200 ரன்களை கடக்கும் பிரமிக்கத்தக்க சாதனையை தவறவிட்டுவிடக்கூடாது என்கிற நினைப்பும் ரித்திகாவின் பதற்றத்திற்கு ஒரு காரணம். ஆனாலும் ரோகித் சர்மா இதைவிட சிறந்த பரிசை திருமண நாளில் தனது மனைவிக்கு கொடுத்திருக்க முடியாது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Rohit sharmas double ton on his wedding anniversary wife ritika sajdeh with tears

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X