News about Rohit sharma - Rishabh Pant - Dinesh Karthik Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்தத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றன.
தினேஷ் கார்த்திக் vs ரிஷப் பாண்ட்
இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் பண்ட் கடந்த ஆண்டு முதல் இந்திய அணியின் அனைத்து ஃபார்மெட்டுகளிலும் முக்கிய வீரராக இருந்து வருகிறார். அதே நேரத்தில், தினேஷ் கார்த்திக், கடந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பண்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இடம் பிடித்தார். இருப்பினும், பண்ட்டுக்கு அதன்பிறகு நடந்த ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில், தினேஷ் கார்த்திக் இரண்டு ஆட்டங்களுக்கும் வெளியில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் இணைந்து விளையாடினர். அந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக பண்ட் இருந்தார்.
தற்போது இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்ரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் அதே உலக கோப்பை அணியுடன் களமிறங்கியுள்ளது. இதில் நேற்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில், முதல் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கும், 2வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும், 3வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு மட்டும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இதில், தினேஷ் கார்த்திக் 3 ஆட்டங்களிலும் பேட்டிங் செய்ய களமாடிய நிலையில், பண்ட் சேர்க்கப்பட்ட 2வது ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஒரு இடத்திற்கு இரண்டு வீரர்களுக்கு இடையே போட்டி நிலவுவது இந்திய கிரிக்கெட்டில் வழக்கமாக இருந்தாலும், இந்த வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டி சற்று வித்தியாசமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த இரு வீரர்களும் இந்திய அணி நிர்வாகம் மாறி மாறி வாய்ப்புகளை வழங்கி வந்தாலும், உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எந்த வீரருக்கு நிலையான இடத்தை வழங்கும் என்பதில் தொடர்ந்து கேள்வி எழுப்பட்டும், பொதுவெளியில் விவாதிக்கப்பட்டும் வருகிறது.
யாருக்கு ஆடும் லெவனில் இடம்
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றிய பின்னர் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இருவருக்கமான உலக கோப்பை இந்திய அணி வாய்ப்பு குறித்து குறிப்பிட்டு கூறியுள்ளார்.
"இந்த இரண்டு பேரும் உலகக் கோப்பைக்கு முன் பல ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். நாங்கள் ஆசிய கோப்பைக்கு சென்றபோது இந்த இருவருமே அனைத்து ஆட்டங்களிலும் விளையாட களத்தில் இருந்தனர்.
ஆனால், தினேஷுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்ட நேரம் தேவை என்று உணர்கிறேன். இந்தத் தொடரில் அவர் அரிதாகவே பேட்டிங் செய்தார். மூன்று பந்துகள் விளையாடி இருக்கலாம். அந்த நேரம் போதாது.
பண்ட்டுக்கும் விளையாட நேரம் தேவை. ஆனால், இந்தத் தொடர் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கும்போது, அந்த நிலையான பேட்டிங் வரிசையை நான் கடைப்பிடிப்பது முக்கியம்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. நாம் அவர்களின் பந்துவீச்சைப் பார்க்க வேண்டும். அவர்கள் எந்த வகையான பந்துவீச்சு வரிசையுடன் விளையாடுவார்கள், அந்த பந்துவீச்சு வரிசையைக் கையாளக்கூடிய நமக்கு யார் சிறந்தவர்கள். இது அனைத்தும் அதைப் பொறுத்தது.
நாங்கள் எங்கள் பேட்டிங்கில் நெகிழ்வு தன்மையுடன் இருக்க விரும்புகிறோம். எனவே சூழல் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்று கோரினால், இடது கைப்பழக்கத்தை கொண்ட பேட்ஸ்மேனை அணியில் சேர்ப்போம். வலது கை பேட்ஸ்மேன் தேவை என்றால், அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.
ஆனால் நாங்கள் அந்த வீரர்களை மிகவும் கவனமாக நிர்வகிக்க முயற்சித்து வருகிறோம். உலகக் கோப்பைக்கு முன் அவர்களுக்கு விளையாட்டு நேரம் தேவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக 11 வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்." என்று கேப்டன் ரோகித் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.