இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம் அடைந்தது. 208 ரன்களை சேஸ் செய்யவே திணறி விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா.
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. டாஸ் ஜெயித்து ‘பேட்டிங்’கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 209 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
தென் ஆப்பிரிக்கா அணி 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்க்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தது. 2-வது இன்னிங்ஸில் மொத்தம் 41.2 ஓவர்களில் 130 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 35 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா, முகம்மது ஷமி தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
முரளி விஜய் (13 ரன்), தவான் (16 ரன்), புஜாரா (4) ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்தனர். கேப்டன் விராட் கோலி, ‘இந்த பிட்ச்சில் தடுப்பாட்டம் ஆகாது’ என புரிந்து வேகமாக ரன் குவிக்க முயன்றார். ஆனால் அவரும் 28 ரன்களில் பிலாந்தர் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ரோகித் சர்மா 10 ரன்களும், கடந்த இன்னிங்ஸில் கலக்கிய ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.
35 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்தியா 103 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அஸ்வின் 16 ரன்களுடனுன், புவனேஸ்வர் குமார் 6 ரன்களுடனும் களத்தில் நின்றனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலாந்தர் 3 விக்கெட்டுகளும், ரபாடா, மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். மழையால் 3-வது நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்ட போதும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால், ஆட்டம் முடிவை நோக்கி நகர்ந்தது.
இத்தனைக்கும் தென் ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக பிரதான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினால் பந்து வீச முடியவில்லை. இதர பந்து வீச்சாளர்களை வைத்தே இந்திய முன்னணி வீரர்களை தென் ஆப்பிரிக்கா காலி செய்தது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் தவானுக்கு பதில் லோகேஷ் ராகுலையும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ரஹானேவையும் இறக்கியிருக்க வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஒருநாள் போட்டியில் ரஹானேவுக்கு சரியான வாய்ப்பு கொடுக்காத விராட் கோலி, இலங்கை டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாததை மட்டும் காரணமாக வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் சிறப்பான ரெக்கார்ட் வைத்திருக்கும் ரஹானேவை தவிர்த்திருக்க வேண்டியதில்லை.