இந்திய கிரிக்கெட் அணி இன்று 4-வது ஒருநாள் போட்டியில் மோதுகிறது. தென் ஆப்பிரிக்காவின் ‘பிங்க் டிரஸ்’ ராசியை இந்திய அணி முறியடிக்குமா? என்பது இன்று தெரிய வரும்!
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரில் 3-0 என முன்னிலையில் இருக்கிறது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்று (ஜனவரி 10) நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் ஜெயித்தால், தொடரை இந்தியா வென்றுவிடும். அதன் மூலமாக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வென்ற சாதனையை படைக்கலாம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜோகன்னஸ்பர்க், வாண்டரர் மைதானத்திலேயே 4-வது ஒருநாள் போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்கும். டெஸ்ட் போட்டியின்போது வாண்டரர் மைதானத்தில் பந்துகள் தாறுமாறாக பவுன்ஸ் ஆகின. ஆனாலும் இந்தியா சமாளித்து வெற்றி பெற்றது.
எனவே ஒருநாள் போட்டிக்கு கூடுதல் கவனத்துடன் மைதானத்தை தயார் செய்திருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். பொதுவாக இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது ஆகும். சர்வ சாதாரணமாக இங்கு 400 ரன்களுக்கு மேல் தென் ஆப்பிரிக்கா குவித்த வரலாறுகள் உண்டு. குறிப்பாக அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் இங்கு 44 ரன்களில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
கடந்த 3 ஆட்டங்களில் காயம் காரணமாக அணியில் இடம் பெறாத டி வில்லியர்ஸ், குணம் பெற்று இந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்புகிறார். முதல் 3 ஆட்டங்களிலும் மிடில் ஆர்டரில் சரியான பார்ட்னர்ஷிப் அமையாததே தங்களின் தோல்விக்கு காரணம் என்கிறார், அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டுமினி. இன்று டி வில்லியர்ஸ் களம் இறங்குவதால் அந்தக் குறையை போக்க முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் தோற்றால், தொடரை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திவிடும் திட்டத்தில்தான் இன்று தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கும். விராட் கோலியின் பேட்டிங்கும், மணிக்கட்டை பயன்படுத்தி பந்தை சுழல வைப்பவர்களான யுஸ்வேந்திர சாஹல்-குல்தீப் யாதவ் கூட்டணியும்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் மிரட்டலாக இருக்கிறார்கள்.
எனவே இந்த மூவருக்கும் எதிராக விசேஷ திட்டங்களுடன் களம் இறங்குவோம் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் கூறியுள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்தப் போட்டி மூலமாக கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள புற்று நோயாளிகளுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக இந்தப் போட்டியில் வழக்கமான பச்சை ஆடைக்கு விடை கொடுத்துவிட்டு ‘பிங்க்’ நிற ஆடையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
இதற்கு முன்பு 5 முறை இதேபோல ‘பிங்க்’ நிற ஆடையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். அந்த 5 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிரடி மன்னன் டி வில்லியர்ஸ் அந்த 5 ஆட்டங்களிலும் அபாரமாக ரன் குவித்து 112 ரன்களை சராசரியாக வைத்திருக்கிறார்.
கடந்த ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலும் இன்று அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக லுங்கி நிகிடி நீக்கப்படலாம். இந்திய அணி தரப்பில் பெரிய மாற்றம் இருக்காது. ஆட்டத்தின் இடையே லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மழையால் பாதிப்பு இல்லாமல் இருந்தால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.