கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் விராட் கோலி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய மும்மூர்த்திகளால் ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது.
#TeamIndia win the 3rd ODI by 124 runs. Lead the six-match ODI series
3-0 #SAvIND pic.twitter.com/AVqQopWgHv
— BCCI (@BCCI) February 7, 2018
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, ஒரு நாள் போட்டித் தொடரில் அசத்தி வருகிறது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்ற கையுடன், 3-வது ஒருநாள் போட்டி தண்ணீர் பஞ்சத்திற்கு பெயர் பெற்ற கேப் டவுன் நகரில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.
டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராம், பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டர்க்காரர் ஷிகர் தவானும், கேப்டன் விராட் கோலியும் அருமையான ‘பார்ட்னர்ஷிப்’ கொடுத்தனர்.
தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்த ஆடுகளம், போகப்போக ‘ஸ்லோ’ ஆனது. எனவே ரன்களை குவிப்பதும் அவ்வளவு சுலபமாக இல்லை. இதை உணர்ந்த கோலி, வழக்கத்திற்கு மாறாக மிகப் பொறுமையாக ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தார். ஷிகர் தவான், தனக்கேயுரிய பாணியில் அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டார்.
ஷிகர் தவான் - விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. 23.1 ஓவர்களின் அணியின் ஸ்கோர் 140 ஆக இருந்தபோது ஷிகர் தவான் (63 பந்துகளில் 76 ரன்கள்) பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் ஜே.பி.டுமினியின் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ராமிடம் பிடி கொடுத்தார்.
அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்களான ரஹானே(13 பந்துகளில் 11 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (15 பந்துகளில் 14 ரன்கள்), டோனி (22 பந்துகளில் 10 ரன்கள்), கேதர் ஜாதவ்(3 பந்துகளில் 1 ரன்) என அடுத்தடுத்து நடையைக் கட்டினர். ஆனாலும் கோலி மட்டும் ஒரு முனையில் அசையாமல் நின்றார்.
42.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தது. எனவே அதிகபட்சமாக 270 ரன்களுக்குள் இந்தியா ஆல்-அவுட் ஆகும் வாய்ப்பு அப்போது தெரிந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் களம் இறங்கியதும் அவரை ஒருமுனையில் நிறுத்திக்கொண்டு, கூடுமானவரை தானே பந்துகளை எதிர்கொள்ளும் வகையில் விளையாடினார் கோலி!
அவரது இந்த தந்திரமான ஆட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த ஜோடி கடைசி 7.2 ஓவர்களில் 67 ரன்கள் குவித்தது. இதில் புவனேஷ்வரின் பங்கு 16 ரன்கள் (19 பந்துகள்)தான்! இறுதிவரை களத்தில் நின்ற கோலி 160 ரன்கள் (159 பந்துகள்) குவித்தார். அதில் 12 பவுண்டரிகளும், கடைசி கட்டத்தில் அடித்த 2 சிக்சர்களும் அடங்கும்.
இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 303 ரன்களை குவித்தது. இந்த மைதான தன்மைக்கு இது பெரிய ஸ்கோர்!
பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரரும் முக்கிய வீரருமான ஹசிம் அம்லா 1 ரன்னில் பும்ராவால் எல்.பி.டபிள்யூ செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் மார்க்ராமும், ஜே.பி.டுமினியும் இந்திய அணிக்கு விராட் கோலியும் ஷிகர் தவானும் செய்த பங்களிப்பை நோக்கி தங்கள் அணியை நகர்த்தினார்கள். அதாவது விராட் கோலியைப் போலவே கேப்டன் மார்க் ராம் நிதானமாக ஆட, இன்னொருபுறம் ஷிகர் தவான் ‘ரோல்’-ஐ டுமினி கையில் எடுத்தார். 16 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோரை 75 ரன்களுக்கு இந்த ஜோடி எடுத்துச் சென்றது.
ஆனால் அதன்பிறகு இந்தியாவின் ‘ரிஸ்ட் ஸ்பின்னர்களான’ யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையை அடியோடு சீர்குலைத்தனர். முதலில் மார்க்ராம் (42 பந்துகளில் 32 ரன்கள்) குல்தீப் பந்தை ஒரு ஸ்டெப் இறங்கி அடிக்க முயற்சிக்க, டோனியால் அருமையாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார். டுமினியை (67 பந்துகளில் 51 ரன்கள்) சாஹல் எல்.பி.டபிள்யூ செய்தார்.
பின்னர் வந்தவர்களில் டேவிட் மில்லர் (42 பந்துகளில் 25 ரன்கள்) ஓரளவு தாக்குப் பிடித்தார். மொத்தம் 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 9 ஓவர்களில் 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சாஹல் 9 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அள்ளினர். எஞ்சிய 2 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்தார். இதன் மூலமாக 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய விராட் கோலி, இந்தப் போட்டியிலும் அபாரமாக விளையாடி சாதித்திருக்கிறார். அதேபோல 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 119 ரன்களில் சுருட்டிய சாஹல்-குல்தீப் சுழல் கூட்டணி, இந்தப் போட்டியிலும் 8 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியை சுலபமாக்கியது. இரு இளம் சுழற்பந்து வீச்சாளர்கள், கேப்டன் அடங்கிய மும்மூர்த்திகள் முதல் முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் இப்படியொரு ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பெறுவதற்கு உதவி செய்திருக்கிறார்கள்.
6 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இன்னும் ஒரு போட்டியில் ஜெயித்தாலே, இந்தியா தொடரை வென்றுவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.