இந்திய ‘ரிஸ்ட் ஸ்பின்னர்கள்’ வெளிநாட்டு மண்ணிலும் ஜொலிப்பது அற்புதமான அனுபவம்! இன்று செஞ்சுரியனில் நடந்த போட்டியில் 118 ரன்களில் தென் ஆப்பிரிக்கா சுருண்டது.
South Africa all out for 118 runs in 32.2 overs (@yuzi_chahal 5/22, @imkuldeep18 3/20) #SAvIND pic.twitter.com/svLQ3kdvob
— BCCI (@BCCI) February 4, 2018
இந்திய கிரிக்கெட் அணி, உள்நாட்டில் மட்டுமே வெற்றிகளை குவிக்கிறது என்பது நெடுநாள் புகார். தற்போதைய தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் முதல் இரு டெஸ்ட்களில் தோற்றாலும்கூட, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் தங்களது பணியை செவ்வனே செய்தார்கள். முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற சுழற் பந்து வீச்சாளர் அஸ்வினும் குறை வைக்கவில்லை.
டெஸ்ட் தொடரை 1-2 என இந்தியா இழந்த நிலையில், ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கியது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்றது. அதில் இளம் சுழல் கூட்டணியான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
2-வது ஒரு நாள் போட்டி இன்று செஞ்சுரியனில் நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தபோதும், எதிர்பார்த்த அளவு விக்கெட் வீழ்ச்சி இல்லை. ஹசிம் அம்லாவும், குயிண்டன் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 39 ரன்கள் சேர்த்தபிறகே பிரிந்தார்கள். ஆனால் அதன்பிறகு மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் கலை அறிந்த இந்திய ‘ரிஸ்ட் ஸ்பின்னர்’களான யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் தென் ஆப்பிரிக்க பேட்டிங் வரிசையை அடியோடு குலைத்தனர்.
அந்த அணி சார்பில் இந்திய துணைக்கண்டத்தில் ஆடி அனுபவம் பெற்ற ஹசிம் அம்லா (23 ரன்கள்), குயிண்டான் டி காக் (20 ரன்கள்), ஜே.பி.டுமினி (25 ரன்கள்), கிரிஸ் மோரிஸ் (14 ரன்கள்) ஆகியோர் ஓரளவு தாக்குப் பிடித்தனர். இவர்களைத் தவிர்த்து புதுமுக வீரரான ஸொண்டோ (25 ரன்கள்) ஒருவரே இந்திய சுழற் கூட்டணியை சமாளித்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர்.
மொத்தம் 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்கா இழந்தது. 8.2 ஓவர்கள் பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல் 22 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு நாள் போட்டியில் சாஹல் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சுழல் கூட்டாளியான குல்தீப் யாதவ், 6 ஓவர்களில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவும், புவனேஷ்வரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்காவின் கடைசி 6 விக்கெட்டுகள் 19 ரன்களில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான ஏ பி டிவில்லியர்ஸ், பாஃப் டு பிளிசிஸ் ஆகியோர் களம் இறங்காதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 6.3 ஓவர்களில் ரோகித் சர்மாவை மட்டும் இழந்து 38 ரன்கள் சேர்த்திருந்தது. தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய பந்து வீச்சு மெச்சும்படியாக இருப்பதும், குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் இந்திய ஸ்பின்னர்கள் அற்புதமாக பந்து வீசுவதும் ஆச்சர்யம் கலந்த பெருமிதம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.