24 வருடங்களாக இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி, கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வுப் பெற்றார். சச்சினை எந்த அளவுக்கு ரசிகர்கள் நேசிக்கிறார்களோ, அதே போன்று அவரது ஜெர்ஸி நம்பரான 10-க்கும் அதிக மாஸ் உள்ளது. அது சச்சினின் தனி அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
2012 மார்ச் மாதம் கடைசியாக நம்பர்.10 கொண்ட ஜெர்ஸியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது சச்சின் அணிந்திருந்தார். அதன்பின், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால், அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த எண்ணை யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாக்குர் No.10 ஜெர்ஸியை அணிந்து விளையாடினார்.
இதை பல சச்சின் ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர். சமூக தளங்களில் பிசிசிஐ-யும், தாக்குரையும் ட்ரால் செய்தனர். ஷர்துல், 'சச்சினாக முயற்சி செய்கிறார்' என்று விமர்சனம் செய்தனர். ஆனால், ஹர்பஜன் உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் ஷர்துலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதுகுறித்து ஷர்துல் விளக்கமளிக்கையில், "நியூமராலஜிக்காக தான் இந்த எண்ணை நான் உபயோகம் செய்தேன். எனது பிறந்த தேதி 16.10.1991. இதன் கூட்டுத் தொகை 28. 2+8 =10. இதனால் தான் நம்பர்.10 எண்ணை பயன்படுத்தினேன்" என்றார்.
இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்த விவகாரம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது. இதனால், அந்த எண்ணை நீக்குவது சிறந்தது. இருப்பினும், இந்தியா A அணிக்காகவும், சர்வதேச அல்லாத போட்டிகளில் விளையாடும் போது வீரர்கள் இந்த எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமற்ற நிலையில் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது" என கூறியுள்ளார்.
சச்சின் உபயோகம் செய்தார் என்பதற்காக நம்பர்.10 எண்ணை மற்ற வீரர்கள் உபயோகம் செய்யக் கூடாது என ரசிகர்கள் கூறுவதை, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுகுறித்து பொதுமக்களாகிய உங்களது கருத்துகளையும், பார்வைகளையும் அனைவரும் அறிய ietamil.com Facebook பக்கத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் கருத்துகளை பகிரலாம்.
ஷர்துல் தாக்குர் No.10 ஜெர்ஸி அணிந்து விளையாடிய போது..