கொல்கத்தாவில் நடைபெற்ற ஜேசி முகர்ஜி டிராபி டி20 தொடரில், மொஹுன் பகன் மற்றும் பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணிகள் மோதின. இதில் பங்கேற்று விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் சஹா, 20 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்.
இதில் முதலில் ஆடிய பெங்கால் நாக்பூர் ரயில்வேஸ் அணி, 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மொஹூன் பாகன் அணியில் பேட் செய்த ரிதிமான் சஹா 20 பந்தில் சதம் விளாசினார். இதில் 14 சிக்ஸரும், 4 பவுண்டரியும் அடங்கும். குறிப்பாக, ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சர் அடித்து அசத்தினார்.
இதனால், மொஹூன் அணி 7 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 20 பந்துகளை சந்தித்த சஹா 102 ரன்கள் குவித்தார்.
இப்போட்டிக்கு பின் சஹா பேட்டி அளிக்கையில், "முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி அடித்தும் ஆடினேன். சாதனைக்காக இதனை ஆடவில்லை. ஆனால், ஐபிஎல்-ல் கட்டாயம் நிறைய விதமான ஷாட்களை ஆடுவேன்" என்றார்.
கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் 20 பந்தில் சதம் அடித்தது கிடையாது. ஆனால், இது சர்வதேச போட்டி கிடையாது என்பதால், இந்தச் சாதனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் அணிக்காக சஹா 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த வாரம் நடந்து முடிந்த முத்தரப்பு டி20 தொடரில், இறுதிப் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 8 ரன்னில் 29 விளாசி, அதுவும் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தார். தோனி இன்னும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆடினாலும், மாற்று விக்கெட் கீப்பருக்கான ரேஸில், தினேஷ் கார்த்திக் தற்போது முந்தியுள்ளார். இந்த நிலையில், இன்று 20 பந்தில் சதம் விளாசியுள்ளார் சஹா.